இந்த அரசாங்கம் எமக்கு பதிலளிக்காவிட்டால், எதிர்க்கட்சியில் அமர்வதற்கும் தயார் - மௌலானா

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
ந்த அரசாங்கம் எமது மக்கள் சார்பாக நாம் குரல்கொடுக்கின்ற விடயங்களைச் செவிமடுத்து அவற்றுக்குத் தக்க பதிலளிக்காவிட்டால், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற நான் எதிர்க்கட்சி வரிசையில் போய் அமர்ந்து கொள்வதற்கும் தயாராக இருக்கின்றேன் என்பதையும் பகிரங்கமாகக் கூறி வைக்க விரும்புகின்றேன். இதுபற்றி நான் ஏற்கெனவேயும் நாடாளுமன்றத்தில் மிகவும் காரசாராமாகப் பேசியிருக்கின்றேன். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 09.07.2017 இடம்பெற்ற 'முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்' எனும் தொனிப் பொருளிலான நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

ஆதரவாளர்கள், சமூக ஆர்வலர்கள், நோக்காளர்கள் மத்தியில் அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்;

அடிமட்ட மக்கள் ஏராளமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள். மக்களுக்காக நாங்கள் பல பிரச்சினைகளில் உள்வாங்கப்படுகின்றோம். தாங்கள் காலாகாலமாக எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளுக்கு விமோசனம் கிடைக்காதா என்று ஏங்குகின்ற மக்களுக்காக நாங்கள் அந்தப் பிரச்சினைகளுக்குள் முகங் கொடுக்கின்றோம்.

கடந்த யுத்தத்திற்கு முன்னரும், யுத்த காலத்திலும், யுத்தத்திற்குப் பின்னரும் தாங்கள் எதிர்கொண்டு வருகின்ற தீராப் பிரச்சினைகளுக்கு தங்களது மக்கள் பிரதிநிதிகள், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் மூலமாக தீர்வுகள் கிட்ட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்த விடயங்களை நாங்கள் முன்கொண்டு செல்கின்ற போது எங்களுக்கு இனவாதிகள் சேறுவாரிப் பூசுகின்றார்கள். அதற்காக நாங்கள் ஒருபோதும் பயப்படப் போவதில்லை. ஏனென்றால் நாங்கள் அனைத்து மக்களுக்காகவும்தான் குரல்கொடுக்கின்றோம். இன மத பிரதேச வேறுபாடுகள் என்னிடம் இல்லை. எனது கடந்த கால அரசியல்வாழ்வும் நிகழ்கால அரசியல் வாழ்வும் அவ்வாறானதே.

33 சதவீதம் மட்டக்களப்பு மாவட்டத்திலே வாழ்கின்ற முஸ்லிம்கள் மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில் சுமார் 2 தொடக்கம் 3 சத வீத நிலத்திலேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இது ஒரு தெளிவான அநீதியாகும். இந்தப் பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் தார்மீக உரிமை எனக்குண்டு.

உண்மையான இணக்கப்பாடு இந்நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என்றால் எல்லா மக்களினுடைய தீர்க்கப்படாமல் புரையோடிப் போய் இருக்கின்ற அனைத்துப் பிரச்சினைகளும் தேசிய நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமாகத் தீர்க்கப்பட வேண்டும்.

ஆனால், தேசிய நல்லிணக்க அரசிலே இருக்கின்ற சில அமைச்சர்கள், அமைச்சு அதிகாரிகள் எங்களுக்கும் நல்லிணக்கத்துக்கும் பல பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நாட்டின் சிறுபான்மையினராக இருப்பதோடு சுதந்திர காலத்திற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் இன்று வரை இந்த நாட்டின் இறைமைக்கும் தேசிய சௌஜன்ய வாழ்வுக்கும் தங்களை அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம் சமூகத்துக்கு அநியாயம் இழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம்களுக்குத் துரோகம் செய்யும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்கு உதவிக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்களே முஸ்லிம் சமூகத்துக்கு நேரடியாக அநியாயம் செய்து கொண்டிருக்கின்ற நிலைமை நல்லாட்சி அரசிலே உள்ளது. நாட்டுப் பற்றிலும் சகவாழ்விலும் நாட்டம் கொண்ட இலங்கை முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து இன்னல்களுக்குள்ளாக்குவது பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல.

முஸ்லிம்களின் வாழ்வு, வாழ்வாதாரம், பொருளாதாரம், இருப்பு என்பனவற்றை இந்த இனவாதிகள் இலக்கு வைத்துத் தாக்குகின்றார்கள். ஆனால், இந்த இழி செயல்களுக்கு நாம் நமது நற்புண்புகளால் பதிலளிக்க தொடர்ந்து எங்களை அர்ப்பணித்துள்ளோம்' என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -