இப்தார் நிகழ்வுகளை ஒழுங்கு செய்து நடாத்துவது ஆட்சியாளர்களின் கடமைகளில் ஒன்றல்ல-ஹனீபா மதனி

சப்றின்-

ப்தார் நிகழ்வுகளை ஒழுங்கு செய்து நடாத்துவது ஆட்சியாளர்களின் கடமைகளில் ஒன்றல்ல. காலா காலமாக இந்த நாட்டின் முஸ்லிம்கள் நோன்பு நோற்கின்ற போது இப்தார் நிகழ்வுகளையும் நடாத்திக்கொண்டு வந்திருக்கின்றனர். 

இவ்வாறான ஓர் நிலைமையில் முஸ்லிம்களுடைய சமய உணர்வுகளையும், நோன்பு கால வழிபாடுகளையும் அரசாங்கமும், ஆட்சியாளர்களும் அங்கீகரித்து அதில் அவர்களும் பங்கேற்று பரவசமடைகின்றார்கள் என்பதனை வெளிக்காட்டுகின்ற நிகழ்வுதான் ஜனாதிபதியினாலும், பிரதமரினாலும் ஒழுங்கு செய்யப்படுகின்ற இப்தார் வைபவங்களாகும். இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தி நாட்டில் சிறுபான்மை மக்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையில் இங்குள்ள ஆட்சியாளர்கள் நடந்து கொள்வது இவர்களின் பெருந்தன்மையையே வெளிக்காட்டுகின்றது என அக்கரைப்பற்று மாநாகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவரும், சிறிலங்கா காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான அஷ்ஷேய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்தார்.


நமது ஜனாதிபதியும், பிரதமரும் நடாத்தவிருக்கின்ற இவ்வருட இப்தார் நிகழ்வுகளில் முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளக்கூடாது எனும் ஒரு விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்படி கூறினார்.


அவர் மேலும் கூறுகையில் - இதனைப் புரிந்து கொள்ளாது, சட்டபூர்வமான ஓர் அரசாங்கம் நடாத்துகின்ற நிகழ்வை புறக்கணிக்குமாறு சமூகவலைத்தளகங்களில் எதிரான செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிடுவது இஸ்லாமியப் பார்வையிலும், அரசியல் நோக்கிலும் ஓர் ஆரோக்கியமான விடயமாகத் தோன்றவில்லை.


இப்தார் நிகழ்வை புறக்கணிக்க சொல்லப்படுகின்ற காரணம் சரியானதா என்பதை மீள்பரிசீலனை செய்து கொள்ள வேண்டியுள்ளது. முஸ்லிம் விரோத செயற்பாடுகளை மேற்கொள்வோர் அரசாங்கத்துக்கு கொடுக்கின்ற அழுத்தங்களின் ஊடாக அடைந்து கொள்ள துடிக்கின்ற வெற்றிகளுள் ஒன்றாக இந்த விவகாரம் சிலவேளை மாற்றம் பெறவும் வாய்ப்புள்ளது என்பதையும் இங்கு கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது.


நமது நாட்டில் தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்ற இன வன்முறைச் செயற்பாடுகள் மிகுந்த வேதனைக்குரியதாகும். எனவே அவற்றைக் கண்டிப்பதும் தண்டிப்பதும் அரசின் தார்மிகக் கடமையாகும். இருப்பினும் இதனை 'இப்தாருடன்' முடிச்சுப் போட்டுக் கொள்வது எமக்கு வெற்றியையோ விமோசனத்தையோ தருவதற்குப் பதிலாக எதிர் மறையான முடிவுகளை கொண்டு வந்து விடுமா என்பது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.

எமக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற இனவன்முறைகளை எடுத்து உரத்துப் பேசுகின்ற இடங்களாக பாராளுமன்றத்தையும், அமைச்சரவையையும் அதனைத் தொடர்ந்து நீதிமன்றங்களையும் நாம் தேர்ந்து கொள்ளவேண்டும். துணிகரமாக கருத்துக்களைச் சொல்லி, தீர்வினை பெற்றுக்கொள்ள தம்மால் அனுப்பபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அமைச்சர்களையும் மக்களாகிய நாம் தயார்படுத்துதல் வேண்டும். அந்த உயரிய சபைகளில் தீர்வு எட்டப்படாது போகுமானால் மக்களும், மக்கள் பிரதிநிதிகளுமாக ஒன்றித்து சில முடிவுகளின் பால் நகரவேண்டும்.

இப்தார் போன்ற முஸ்லீம்கள் மேற்கொள்ளும் சமயரீதியான விவகாரங்களில் அரசாங்கம் காண்பிக்கின்ற நல்லெண்ணத்தை சீர்குலைக்க எத்தனிக்கின்ற தீய சக்திகளுக்கு தீனி போடும் விதமாக நாம் நடந்துவிடக்கூடாது.

கடந்த அரசாங்க காலத்தின் போதுதான் இவ்வாறான இனமுரண்பாட்டு நடவடிக்கைகளும் வெறுப்பூட்டும் பேச்சுக்களும் ஆரம்பிக்கப்பட்டு மிக உச்சக் கட்டத்தை அடைந்திருந்தன. ஆனாலும், அப்போதைய ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் போன்ற முக்கிய ஆட்சியாளர்களின் 'இப்தார்' வைபவங்களுக்கு நாம் எந்தவித எதிர்ப்புக்களையும் காண்பிக்கவில்லை.

எனவே எமக்கு ஏற்பட்டுள்ள துயரமான நிலையில் இருந்து நமது சமூகத்தினைபாதுகாத்துக் கொள்ள தூர நோக்குடனும், தெளிவான சிந்தனையுடனும் நாம் பயணிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும் என்றும் மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -