"இந்த நெருக்கடியான சூழலில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்"

NFGG ஊடகப் பிரிவு-

"முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நளாந்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது பிரதமரிடமிருந்தோ இன்று வரை எந்தப் பொறுப்பான பதில்களும் வரவில்லை. பொறுப்பும் பதிலும் கூற வேண்டிய இந்த விடயத்தில் அவர்களின் அடிப்படைக் கடமையினை தொடர்ந்தும் புறக்கணிப்பதனை அனுமதிக்க முடியாது.இந்த நெருக்கடியான சூழலில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலை குறித்து NFGG யினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளை தாக்கும், எரிக்கும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இதனை அரசாங்கம் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தொடர்ச்சியான அழுத்தங்களுக்குப் பின்னர், தற்போதுதான் ஓரிருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஒளிந்து கொண்டிருக்கும் ஏனைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்.

மிகக் குறுகிய காலத்தில், இதுபோன்ற சம்பவங்கள் அடுக்கடுக்காக நாளாந்தம் இடம்பெற்று வருவதானது, அரசாங்கத்தின் இயலாமையையே மாத்திரமின்றி பக்கச்சார்பான நிலைப்பாட்டினையே புலப்படுத்துகிறது. கவலையளிக்கும் இந்நிலை தொடருமாயின், மோசமான பின்விளைவுகளுக்கே இட்டுச் செல்லும்.

நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சர்ச்சைக்குரிய மதகுருவை, அமைச்சரவை அங்கத்தவர் ஒருவரே ஒளித்து வைத்துள்ளார் என்று ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இது இப்போது நாடெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது.

புலிகளை அடக்க முடிந்த புலனாய்வுப் பிரிவுக்கு அந்த நபர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்பது வேடிக்கையான விடயம் என, பலரும் பாராளுமன்றத்தில் பேசியுள்ளனர். அரசாங்கத்தினதும் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சரினதும் பொலிஸாரினதும் இயலாமையை அப்பட்டமாக வெளிப்படுத்தும் இவ்வாறான கருத்துகளுக்கு அரசாங்கத்தின் பதில்தான் என்ன?

இவ்வளவு நடந்தும், இதன் முக்கியத்துவத்தையும் பாதிப்பையும் குறைத்து மதிப்பிடும் வகையிலேயே அரசாங்கத்தின் பொறுப்பான பதவிகளிலுள்ளோர் நடந்து கொள்கின்ளனர். குறிப்பாக ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது பிரதமரிடமிருந்தோ இன்று வரை எந்தப் பொறுப்பான பதில்களும் வரவில்லை என்பது வேதனையளிக்கிறது. பொறுப்பும் பதிலும் கூற வேண்டியது அவர்களின் இந்த அடிப்படைக் கடமையினை அவர்கள் தொடர்ந்தும் புறக்கணிப்பதனை அனுமதிக்க முடியாது.

ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டு மக்கள் எல்லோரினதும் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் செயற்பட வேண்டும். அதற்காகவே எல்லா இன மக்களும் ஒன்று திரண்டு அவர்களுக்கு வாக்களித்தனர்.

இந்த நெருக்கடியான சூழலிலும் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், நிலமை மேலும் சிக்கலாகி பாதகங்களுக்கும் அழிவுக்குமே வழி வகுக்கும். இதில் அவர்கள் அதிக கரிசனை கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்."

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -