க.கிஷாந்தன்-
கொழும்பு றாகம பிரதேசத்திலிருந்து தலவாக்கலை பேரம் தோட்டத்திற்கு தேயிலை செடிகளுக்காக உரங்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதால் அப்பகுதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாகனம் இராணிவத்தை நோனாதோட்டம் பாலத்தில் செல்லும் போது பாலம் உடைந்து விழுந்ததால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து 10.06.2017 அன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி கனரக லொறியில் சுமார் 16 டொன் உரமூடைகள் இருந்துள்ளன. அவற்றை பாதுகாப்பாக மற்றைய லொறி ஒன்றுக்கு தொழிலாளர்கள் மூலம் ஏற்றப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்விபத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
லிந்துலைப் பொலிஸார் மற்றும் பொது மக்கள் போக்குவரத்தை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை லிந்துலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.