கிழக்கு முஸ்லிம்களுக்கு கிழக்கை சேர்ந்த அரசியல் தலைமைத்துவமே இருக்க வேண்டும் என நாம் சொல்வது பிரதேச வாதம் அல்ல என்பதை மீண்டும் அழுத்தமாக கூறுகிறோம் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அவர் இது பற்றி கூறியதாவது;
ஒரு கட்சிக்கு எந்த மாகாணத்தில் அதிக வாக்கு பலம் உள்ளதோ அந்த மாகாணத்தை சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவதே மக்கள் நலன் சிந்திக்கும் கட்சியினரின் செயலாக இருக்கும்.
தமிழ் கூட்டமைப்பு என்பது வடக்கு கிழக்கை தளமாக கொண்ட கட்சி என்பதால் அம்மாகாணங்களை சேர்ந்தவர்கள் தலைவர்களாக இருக்கின்றனர். எம்மிடம் பிரதேச வாதம் இல்லை என்பதால் தமிழ் கூட்டமைப்புக்கு மனோ கணேசனை தலைவராக்குவோம் என வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சொல்வார்களா? அதனை மனோ கூட ஏற்க மாட்டார்.
அதேபோல் மலையக வாக்குகளை கொண்ட தமிழ் கட்சிகளுக்கு வடக்கு தமிழர் தலைமையாக இருப்பதை வரலாற்றில் கண்டுள்ளோமா?
ஒரு கட்சி தேசிய ரீதியாக அதிக வாக்குகளையும் கிழக்கில் சில வாக்குகளையும் கொண்டிருந்தால் கூட அக்கட்சிக்கு கிழக்கை சேர்ந்த எவரையும் தலைவராக நியமிக்க அக்கட்சியினர் ஏற்க மாட்டார்கள் என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிழக்கு அல்லாத தலைவரைக்கொண்ட கட்சியில் கிழக்கு மக்கள் இருக்க வேண்டாம் என நாம் சொல்லவில்லை. அது அவரவர் ஜனநாயக விருப்பம். ஆனால் கிழக்கு மக்களின் வாக்குகளை மட்டுமே அடிப்படையாக கொண்ட கட்சிக்கு கிழக்கை சேர்ந்த ஒருவரே தலைமை வகிப்பதே அம்மக்களின் பிரச்சினைகளை இனம் கண்டு அவற்றை அரசியல் ரீதியாக தீர்க்க முடியும் என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும்.
முஸ்லிம் காங்கிரசுக்கு அதன் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வெல்லும் வாக்கு பலம் கிழக்கில் தவிர வேறு எங்கும் இல்லை. ஆனால் அதன் தலைவரோ கிழக்கை விட்டும் தூரமாக உள்ளவராக இருக்கின்றார். அனைத்து மக்கள் மீதும் கரிசணை கொண்ட முஸ்லிம்கள் தென்னிலங்கையில் முன்னர் இருந்துள்ளனர். ஆனால் மு. காவின் தலைமையினால் கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்ந்துள்ளதா என்றால் இல்லை என்பதே பதிலாக கிடைக்கும். ஆக குறைந்தது முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கென அதன் கோட்டையான கல்முனையில் மக்கள் பணிமனை ஒன்று கூட இல்லை என்பதன் மூலம் எந்தளவுக்கு கிழக்கு முஸ்லிம்கள் புறந்தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை புரியலாம்.
ஆகவே கிழக்கில் மட்டுமே பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெறப்படும் நிலையில் உள்ள கட்சிக்கு கிழக்கை சேர்ந்த ஒருவரே தலைமை தாங்க வேண்டும் என்பது பிரதேச வாதத்துக்கு அப்பால் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையாகும். அவ்வாறு நியமிக்காது போனால் கிழக்கு மக்கள் அக்கட்சியை முழுமையாக நிராகரிப்பதே அம்மக்களின் எதிர்கால அரசியலை தக்க வைக்க ஒரே வழியாகும். இல்லாவிட்டால் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இன்னுமின்னும் பல இன்னல்களையும் இழப்புக்களையும் சந்திக்க வேண்டி வரும் என்பதை உலமா கட்சி எச்சரிக்கிறது.