அப்துல்சலாம் யாசீம்-
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட பெரியவௌி தமிழ் மஹா வித்தியாலயத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற மாணவிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்மை தொடர்பாக திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு மற்றும் மூதூர் பிரதேச பெண்கள் அபிவிருத்தி வலையமைப்பு இன்று (01) கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு மகஜரொன்றினை கையளித்தனர்.
இம்மகஜரில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;
மேற்படி தங்கள் கவனத்திற்கு கொண்டுவரும் விடயம் யாதெனில் திருகோணமலை மூதூர் பிரதேசத்திலுள்ள பெரியவெளி கிராமத்தில் 2ம் தரம் மற்றும் 3ம் தரத்தில் கல்வி பயிலும் பாடசாலை சிறுமிகள் மூவர் (7வயது மற்றும் 8 வயது ) பாடசாலையில் கட்டிட பணியில் ஈடுபட்ட இளைஞர்களால் 28.05.2017 அன்று பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து கிராமமக்கள் பாடசாலை மாணவர்கள் மூதூர்பிரதேச பெண்கள் வலையமைப்பு உறுப்பினர்கள் இணைந்து குற்றவாளியை விரைவாக கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என கோரி 29.05.2017 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எனவே குற்றவாளிகளை தாங்கள் மூன்று நாட்களுக்குள் கைதுசெய்வதற்கான அழுத்தங்களை பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தீர்கள். அதனடிப்படையில் விரைவாக குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு உரிய தண்டனை மிக விரைவாக வழங்கப்படல் வேண்டும்.
இவ்வாறாக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க காலதாமதமாகுமிடத்து இன்னும் இவ்வாறான தவறுகள் பாடசாலை சிறுமிகளுக்கும் மற்றும் பெண்களுக்கும் இடம் பெறும் வாய்ப்புகளும் அதிகரித்துக் கொண்டு செல்வதுடன் பாடசாலை சிறுமிகளுக்கான பாதுகாப்பும் இல்லாத நிலை உருவாகின்றது.
இதனை கருத்திற்கொண்டு பின்வரும் விடயங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தவிர்த்துக்கொள்ளலாம்.
•பாடசாலை மாணவர்களுக்கான தொடுகைமுறை விழிப்புணர்வுகளை நடாத்துதல்
•பாடசாலை அபிவிருத்தி சார் விடயங்களை கிராமமக்களுக்கு வழங்குதல்
•மாணவர்கள் பாடசாலை வளாகத்திலிருந்து வெளியேறும் வரை அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
எனவே தாங்கள் இவ் விடயத்தினை கருத்தில் கொண்டு மிக விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அம்மகஜரில் தெரிவிக்கப்ட்டுள்ளது.