அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் திட்டம் எதிர்வரும் 04 ஆம் திகதி ஞாயிறு தொடக்கம் அமுல்படுத்தப்படவிருப்பதாக கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.
உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கண்டிப்பான பணிப்புரையின் பிரகாரமே கல்முனை மாநகர சபை இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
"எமது நாட்டில் திண்மைக் கழிவுகளை சேகரித்து அகற்றுவதென்பது பாரிய பிரச்சினையாக இருந்து வருகின்றது. பொது மக்களின் ஒத்துழைப்பு போதியளவு இல்லாமையினாலேயே இப்பிரச்சினைக்கு பிரதான காரணமாகும். இது விடயத்தில் கல்முனை மாநகர சபையும் பாரிய சவாலை எதிர்கொண்டு வருகின்றது.
எவ்வாறாயினும் இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சானது, திண்மைக் கழிவுகளை தரம்பிரித்து சேகரிப்பதற்கான தேசியக் கொள்கைத் தீர்மானத்தை கடந்த வருடம் மேற்கொண்டிருந்தது. இதன்படி அந்த அமைச்சு விடுத்துள்ள கண்டிப்பான பணிப்புரைக்கமைவாக நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கழிவுகளை தரம்பிரித்து சேகரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளன.
இத்திட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் எதிர்வரும் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வருவதனால், பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்.
இதன்படி உக்கக்கூடிய கழிவுகளான சமையல் மற்றும் உணவுக் கழிவுகள், இலைகுழைகள், பழத்தோல்கள் மற்றும் கடதாசிகள் என்பவற்றை ஒரு பொதியிலும் உக்க முடியாத பிளாஸ்டிக் போத்தல்கள், உலோகப் பொருட்கள், பொலித்தீன் பைகள், இலத்திரனியல் கழிவுகள், கண்ணாடிகள், காட்போட் என்பவற்றை மற்றொரு பொதியிலும் சேகரித்து வெவ்வேறாக ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு தரம்பிரிக்கப்படாத கழிவுகளை எமது மாநகர சபை வாகனங்கள் எச்சந்தர்ப்பத்திலும் பொறுப்பேற்க மாட்டாது என்பதுடன் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் இடமுண்டு என்பதை அறியத் தருகின்றேன்.
கழிவுகளை தரம்பிரித்து சேகரித்து, ஒப்படைப்பதற்கு வசதியாக மாநகர சபையினால் விற்கப்படும் இரு வேறு நிறங்களைக் கொண்ட பைகளை பொது மக்கள் கொள்வனவு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அதேவேளை மரங்கள், கிளைகள், கொப்புகள் போன்றவை எக்காரணம் கொண்டும் மாநகர சபை வாகனங்களில் ஒப்படைக்க முடியாது. இதற்காக குறிப்பிட்ட சேவைக் கட்டணத்தை செலுத்துவதன் மூலம், அவற்றை பொறுப்பேற்பதற்கு மாநகர சபை பிரத்தியேகமாக வாகன ஒழுங்குகளை மேற்கொள்ளும்" என்று கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி குறிப்பிட்டார்.
