பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை மிக விரைவில் கைது செய்தே தீருவோம் எனவும் அது தொடர்பில் யாரும் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவை இல்லை என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.
இது தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு நான்கு விசேட பொலிஸ் குழுக்களை கடமையில் ஈடுபடுத்தியுள்ள நிலையில் குற்றமிழைத்த எவரையும் தப்பிக்க விடப் போவதில்லை, ஞானசாரரின் கைது உறுதியானது எனவும் நீதிமன்ற உத்தரவுகள், சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக சிறப்பு நடவடிக்கையாக அது இடம்பெறும் என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர சுட்டிக்காட்டினார்.
யாழ். பொலிஸ் பிராந்தியத்தில் உள்ள 43 பொலிஸ் நிலையங்கள் ஊடாக சேகரிக்கப்பட்ட அனர்த்த நிவாரணப் பொருட்களை நேற்று முன் தினம் பம்பலபிட்டி பொலிஸ் காலாற்படை தலைமையகத்தில் வைத்து கையேற்ற பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இதனை தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபர் ஊடகவியலாளர்களிடம் பேச ஆரம்பித்த போது, ' ஞானசார தேரரை கைது செய்வதாக முதலில் பொலிஸார் கூறினர். அவர் தற்போது தலைமறைவாகி விட்டார் அல்லவா? என ஊடகவியலாளர்கள் பொலிஸ் மா அதிபரிடம் கேட்டனர். இதற்கு பதிலளித்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர,சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்டத்தை யாராவது மீறுவார்களாயின் அந்த சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாம் பின் நிற்கப் போவதில்லை. அதன்படி ஞானசார தேரரைக் கைது செய்ய தற்போதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டம் வகுக்கப்பட்டு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நீதி மன்ற நடவடிக்கைகளுக்கு அமைவாக சட்ட மா அதிபர் திணைக்களம் ஊடாக பெற்றுக்கொண்டுள்ள விசேட ஆலோசனைகளுக்கு அமைவாக அந் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாம் முன்னெடுக்கும் சிறப்பு நடவடிக்கைகளின் போது கையாளப்படும் கைது நடவடிக்கைகளை ஒத்த கைது நடவடிக்கை ஒன்று அவர் தொடர்பிலும் எடுக்கப்படும் என்பதை தெளிவாக கூறுகின்றேன்.
சில இடங்களில் பொலிஸார் இந்த விடயத்தில் பக்கச் சார்பாக நடந்து கொள்வதாக கூறுகின்றனர். உண்மையில் பொலிஸார் தமது நடவடிக்கைகளின் போது எந்தவொரு இன, மதம் சார்ந்து செயற்படுவதில்லை. எந்த பக்கமும் சார்ந்து நடவடிக்கை எடுப்பதில்லை. யார் குற்றம் இழைத்தாலும் குற்றம் குற்றம் தான். அதனால் மிக விரைவில் அந்த கைது இடம்பெற்றே தீரும். எனவே இந்த விடயத்தில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையே இல்லை. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.
இதன்போது ஞானசார தேரர் மறைந்திருப்பதும் கூட ஒரு குற்றமல்லவா என ஊடகவியலாளர்கள் பொலிஸ் மா அதிபரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆம், எனினும் முதலில் அவர் எங்கு உள்ளார் என்பதை நாம் கண்டுபிடித்தாக வேண்டும். அதன் பின்னர் அவரை நாம் கைது செய்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போம்' என பதிலளித்தார்.