அஸ்கிரிய பீடத்தை பகைத்துக்கொண்டு தேசத்துரோக ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அரசாங்கம் உணர்ந்து கொண்டுள்ளது. எனவே தற்போது அஸ்கிரிய பீடத்திற்கு பதிலடி கொடுப்பதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெளத்த மதத்திற்கான முக்கியத்துவத்தினை குறைக்கின்ற வகையில் புதிய அரசியலமைப்பு சூட்சுமமான முறையில் தயாரிக்கப்படுவதை அறிந்த பெளத்த பீடங்களில் அஸ்கிரிய பீடம் முதலாவதாக எதிர்ப்பை வெளியிட்டது. நாட்டில் இனவாதம் தலையெடுப்பதாக காட்டிக்கொண்டு இஸ்லாமிய இனவாதத்தை மேலீட்ட சில அமைச்சர்கள் முயற்சித்த போதே கண்டி அஸ்கிரிய பீடம் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டது.
அதனால் தற்போதைய அரசாங்கத்தின் தேசத்துரோக செயற்பாடுகளுக்கு அஸ்கிரிய பீடம் இடமளிக்காது என்பதை அரசாங்கம் அறிந்துகொண்டுள்ளது. அதேபோல் அஸ்கிரிய பீடத்தினரை மெளனிக்க வைத்தால் மாத்திரமே தற்போதைய பயணத்தை தொடர முடியும் என்றும் அரசாங்கம் அறிந்து கொண்டுள்ளது.
அதனால்தான் தற்போது தம்புள்ளை ரங்கிரி விஹாரையை அரசுடமையாக்கிக்கொண்டு அதனால் அஸ்கிரிய பீடத்திற்கு பதிலடி கொடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதற்காகவே விஹாரைகளில் உள்ள உண்டியல்களையும் கூட சூறையாட முயற்சிக்கின்றார்கள்.
அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு ஒரு எச்சரிக்கை விடுக்கின்றேன். விஹாரைகளில் உள்ள சொத்துக்களை சூறையாடினால் அவர்கள் அடுத்த பிறவியில் நாய்களாகவும், காகங்களாகவுமே பிறப்பார்கள் என்று வரலாறு கூறுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மாமாவான ஜே.ஆர்.ஜயவர்தன அன்று கெடம்பே விஹாரைக்கு தூபி அமைத்துக்கொடுத்து சொந்தமாக்கிக்கொண்டார். ஆனாலும் அவர் அதற்காக அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவில்லை. இன்று அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து விஹாரைகள் அரசுடமையாக்கப்படுகின்றன.
எனவே மாமாக்கள் செய்யாத செயற்பாட்டைத்தான் இன்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் செய்ய முற்படுகின்றார். எமது நாட்டை முழுமையாக சுரண்டிச் சென்ற கொள்ளையர்கள் கூட விஹாரைகளின் உண்டியல்களில் கை வைக்கவில்லை என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
