பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் பொது பல சேனா அமைப்பை இஸ்ரேலிய உளவுத் துறை அமைப்பான மொசாட் இயக்குவதாக கூறியுள்ள கூற்றினூடாக முன்னாள் ஜனாதிபதி மீது இவர்கள் இத்தனை நாளும் முன் வைத்து வந்த பொது பல சேனாவின் இயக்குனர் என்ற குற்றச் சாட்டு மறுக்கப்படுவதோடு இவ்வரசே அதன் பின்னால் உள்ளது என்ற செய்தியும் மக்களிடையே கொண்டு செல்லப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் சிலோன் டுடேக்கு வழங்கிய நேர்காணலில் பொது பல சேனாவை வெளிநாட்டு சக்திகளே இயக்கி கொண்டிருப்பதாகவும் அவ் அமைப்பை இஸ்ரேலிய உளவுத் துறை அமைப்பான மொசாட் பின்னால் நின்று இயக்கி கொண்டிருப்பதான சந்தேகம் தனக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவரது இக் கூற்றானது பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்துகிறது.
இவர்களை போன்றவர்களே இலங்கை முஸ்லிம்களிடையே பிரச்சாரம் செய்து பொது பல சேனாவின் நிறுவனர்கள் யார் என்ற வினாவை எழுப்பினால் அது முன்னாள் ஜனாதிபதியும் அவர்களது சகோதரர்களுமே என இலங்கை முஸ்லிம்கள் சாதாரணமாக கூறும் மனோ நிலையை தோற்றுவித்தவர்கள். தற்போது அவர்களது வாய்களே அதன் பின்னால் வெளிநாட்டு சக்திகள் இருப்பதாக கூறுகிறது. ஞானசார தேரர் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதியை பல காலமாக விமர்சித்து வந்த அசாத் சாலி, விஜயதாஸ ராஜபக்ஸவே ஞானசார தேரரை கைது செய்யாமல் தடுக்கின்றார் என கூறியுள்ளமையையும் இவ்விடத்தில் நினைவூட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.
முன்னாள் ஜனாதிபதியுடைய காலத்தில் இலங்கையினுள் இஸ்ரேலானது தனது ஆதிக்கத்தை செலுத்தவில்லை. அவர் பலஸ்தீன் சார்பு கொள்கையுடையவராக இருந்தமை இதற்கான பிரதான காரணமாகும். அண்மையில் கூட இஸ்ரேலிய சிறைகளில் பலஸ்தீன கைதிகள் ஆர்பாட்டாம் செய்த போது முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு முன்பு அவரே பாலஸ்தீன தூதரகம் சென்று, அவர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தி கையொப்பமிட்டிருந்தார். அவர் ஜனாதிபதியாவதற்கு முன்பு அவர் பலஸ்தீனுடன் கொண்டிருந்த உறவின் காரணமாக பலஸ்தீனில் இவரது பெயரிலே ஒரு வீதியும் உள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கும் பலஸ்தீனுக்குமிடையில் நெருக்கமான உறவு உள்ளது இலங்கை முஸ்லிம்கள் கூற உளமாற ஏற்றுள்ளனர்.
தற்போதைய அரசு ஆட்சியமைத்த பிறகே இலங்கை நாட்டினுள் இஸ்ரேலின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. 1990ம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச இஸ்ரேலிய நலன்புரி நிலையத்தை இழுத்து மூடியதோடு இலங்கைக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான இராஜதந்திர கதவுகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அன்று இஸ்ரேலுடன் துண்டிக்கப்பட்ட இராஜதந்திர உறவுகளை இவ்வரசே மீண்டும் ஆரம்பித்துள்ளது. இந்த விடயங்களை யாவரும் சாதாரணமாகவே ஏற்றுக்கொள்வார்கள். இப்படியான நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் பொது பல சேனாவின் இயக்குனர் விடயத்தில் இஸ்ரேலிய உளவுத் துறை அமைப்பை சந்தேகப்படுவதற்கும் தற்போதைய அரசை சந்தேகப்படுவதற்கும் இடையில் எந்தவிதமான வேறுபாடுமில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் இவ்வரசோடு மிக நெருக்கமான தொடர்பில் இருப்பதால் சில முக்கியமான இரகசியங்களை அவரால் அறிந்து கொள்ள முடியும். ஒருவர் அறிந்து கொள்ளும் செய்திகளை சில விடயங்களை கருத்தில் கொண்டு சந்தேக பார்வையில் வெளியிடுவார்கள். அந்த வகையிலான செய்திகளில் ஒன்றாகவும் இதனை நோக்கலாம். பொது பல சேனாவானது உருவாக்கப்பட்டது ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காகும். அந்த வகையில் வெளிநாட்டு சக்தி ஒன்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது அந் நாட்டினுள் நுழைவதற்காகும். இலங்கையில் நாட்டில் இஸ்ரேல் நுழைய வேண்டிய தேவை இருப்பதோடு அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடைப்பிடித்து வந்த பலஸ்தீன சார்பு கொள்கை தடையாகவும் அமைந்திருந்தது.
பொது பல சேனாவின் செயற்பாடுகளால் இவ்வாட்சி மாற்றப்பட்டதோடு மாத்திரமல்லாமல் இஸ்ரேலும் இந் நாட்டினுள் புகுந்துள்ளமையானது பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானின் சந்தேகத்தை மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. பொது பல சேனாவின் உரிமையாளர்களாக இஸ்ரேல் இருக்கலாம் என்ற சந்தேகத்தை பார்த்த போது அதனை உண்மைபடுத்தும் வகையில் 2014.08.13ம் திகதி ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பானது காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டிருந்த மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்து இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள ஏற்பாடு செய்த போது, தனது எஜமானுக்கு எதிராக யாராவது எதிராக செயற்பட்டால் உண்மை விசுவாசி எவ்வாறு கிளம்பி வருவானோ அது போன்று இஸ்ரேலுக்கு ஆதரவாக பொது பல சேனா அமைப்பானது ஆர்ப்பாட்டம் செய்திருந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. இவ்விடயத்தில் தௌஹீத் ஜமாதுக்கும் பொது பல சேனா அமைப்புக்கும் சண்டை நிகழ்ந்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பலஸ்தீனத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விடயங்களே முன்னாள் ஜனாதிபதி பொது பல சேனாவின் பின்னால் இல்லை என்பதை உறுதி செய்வதோடு அவர் முஸ்லிம்களுக்கே சார்பானவர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதால் இதனை வெளிப்படையாக கூறும் போது தனது அரசியல் வாழ்க்கை முடிந்து விடும் என்பதால் மறைமுகமாக கூறி இருக்கலாம். இவரது கூற்றினூடாக முன்னாள் ஜனாதிபதி மீதி இவர்கள் இத்தனை நாளும் முன் வைத்து வந்த பொது பல சேனாவின் இயக்குனர் என்ற குற்றச் சாட்டு மறுக்கப்படுவதோடு இவ்வரசே அதன் பின்னால் உள்ளது என்ற செய்தியும் மக்களிடையே கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஸவின் ஊடக பிரிவு-