பாரத தேசத்தில் இன்னுமொரு மகாத்மா உருவாக வேண்டும் - இது காலத்தின் தேவை

ந்தியா, பாகிஸ்தான், பங்காளதேஷ் போன்ற நாடுகளும் நிலத் தொடர்பில் இலங்கையும் அன்று ஒரு பெருநிலப்பரப்பாகவே இருந்தது. மேற்கத்திய பிரித்தானியரின் ஆட்சியிலிருந்து இப்பிராந்தியத்து நாடுகள் விடுதலை பெறுவதற்கு, குறிப்பாக, மகாத்மா காந்தி, நேருஜி, ஜின்னா போன்றோரும் இலங்கையில் டி.எஸ். சேனாநாயக்கா தலைமையிலும் விடுதலைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. வெவ்வேறு நாடுகளிலும் வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்ற வெவ்வேறான பிராந்தியத்தின் தலைவர்களும் இச்சுதந்திரப் போராட்டத்திற்காக பாரிய அர்ப்பணிப்புகளைச் செய்திருந்தனர். ஆயுத யுத்த கலாசாரங்களுக்கு அப்பால் அஹிம்சை போராட்ட வழியில் தனது தேசத்தைக் காப்பாற்றுவதற்கும், தனது மண்ணில் வளங்கள் மற்றயவர்களால் சூறையாடப்படுவதிலிருந்தும் நாட்டைக் காப்பாற்றி உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி தன்னிறைவு காண்பதற்குமான அஹிம்சைப் போராட்டத்திற்கு பாரதத்தில் மகாத்மாகாந்தி தலைமை கொடுத்தார். 

அப்போராட்டத்திற்கு நின்று பிடிக்க முடியாமல் பிரித்தானியர்கள் பாரதத்தை விட்டும் விலகினார்கள் என்பதை விடவும், ஓடினார்கள் என்றே சொல்ல வேண்டும். அவரின் போராட்டத்திற்கு அவ்வளவு மக்கள் பலம் இருந்தது. கூடவே அவருடைய ஆத்மீக செயற்பாடும் அதற்குத் துணைபுரிந்தது. இதனால் பாரதத்திற்கு சுதந்திரமும் கிடைத்தது. உலக வரலாற்றில் "மகாத்மா" என்ற நாமம் உலகம் முடியும்வரை அழிக்க முடியாத இடத்தையும் பிடித்திருக்கிறது. இது பாரதத்தை முழு உலகிற்கும் முன்னுதாரணமாகவும் ஆக்கியது.

எந்தவிதமான குல, கோத்திர, மத பாகுபாடுகளுக்கப்பால் நமது மண், நமது நாடு என்ற உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவே அப்போராட்டம் அமைந்திருந்தது. இந்தியாவினுடைய விடுதலையே இலங்கையும் சுதந்திரம் பெறுவதற்கும் காரணமாக அமைந்தது. விரும்பாவிட்டாலும் நிர்ப்பந்தத்தின் பேரில் ஆங்கிலேயரும் நம் நாட்டை விட்டு அகன்றனர்.

இந்தியா, பாகிஸ்தான், பங்காளதேஷ், இலங்கை போன்ற நாடுகளில் எந்தப் பிராந்தியங்களை எடுத்துக் கொண்டாலும் அங்கு விளைகின்ற தானியங்களையோ, விளைச்சல்களையோ அவதானிக்கின்ற பொழுது அவை ஒரே குண, ரச, வடிவ அமைப்புகளாக இருப்பதனைப் பார்க்கிறோம். ஒரே மண்ணில் விளைந்தவைகளாய் அவை இருக்கின்றன. அவ்வாறுதான் பறவை விலங்கினங்களும் காணப்படுகின்றன. இதேபோன்றுதான் இந்நாடுகளில் வாழும் மனித குலமும் ஒரே உடற்கட்டமைப்பு, ஒரே வகையான அல்லது சார்ந்த நிறப்பொழிவு கொண்டவர்களாகவும், ஒரேவாறான குணவியல்புகளோடும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். 

இது இந்நாடுகள் ஒரே மண் என்பதை நிரூபித்திருக்கிறது. வெளிநாடுகளில் பன்னாட்டவர் கூடுகின்ற சந்தர்ப்பங்களிளெல்லாம் மத, மொழிச் செயற்பாடுகளுக்கப்பால் கண்டவுடனேயே இது நம்மவர் என்று அடையாளப்படுத்துகின்ற வெறுத்தொதுக்க முடியாத ஒரு யதார்த்தத்தினை யாரும் மறந்துவிட முடியாது. அவ்வாறுதான், வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும் வெவ்வேறு மார்க்கங்களை கடைப்பிடிப்பவர்களாக நாம் இருந்தாலும் இந்நாடுகள் ஒரே மண் வாசனையை வீசிக் கொண்டிருப்பதனையும் இந்நாடுகள் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு வழிவகை செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் இன்று மட்டுமல்ல அன்று மகாத்மா காந்தி போன்றோரும் முன்னோரும் எண்ணியிருப்பர்.

இந்த வரலாற்று ஓட்டத்தில் மகாத்மாகாந்தியின் பெரும் எண்ணங்களுக்கு நேருஜி, ஜின்னா போன்றோர் பரிசாகக் கிடைத்தார்கள். இலங்கையில் டி.எஸ். சேனாநாயக்காவும் தேசபிதாவாக மாறினார்.

நேரு அவர்களுடைய ஆட்சியைத் தொடர்ந்து அவருடைய வாரிசான மகள் இந்திராகாந்தி இந்தியாவுக்கு தலைமை கொடுத்தார். இக்காலங்களிளெல்லாம் பிரித்தானிய, ஐரோப்பிய மேற்கு நாடுகளுக்கு சிறிதேனும் அடிபணியாத கொள்கையோடு தங்களின் தாயகம், நாடு என்ற உணர்வுகளோடு மாத்திரம் பார்வை முடக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சிலவேளை இலங்கை நாட்டை மேற்கத்தைய வல்லரசுகள் கையில் எடுத்து இந்தியாவுக்கு எதிராக செயற்படலாம் என்று அவர் அச்சம் கொண்டிருந்தார். இவ்வாறுதான் பாகிஸ்தானும் பார்க்கப்பட்டது. இதனால் இலங்கையை ஆசையோடும் அன்பாகவும் பார்க்காமல் எதிரிநாடாகப் பார்ப்பதற்கும் தள்ளப்பட்டார். இந்திராகாந்தி அன்று ஒரு மகாத்மாவாக தொழிற்பட்டிருந்தால் இந்தியாவின் இன்றைய பிரச்சினைகளுக்கும் அயல்நாடுகளுக்குமிடையிலான சந்தேகப் பார்வைகளுக்கும் தீர்வு காணக்கூடியதாகவிருந்திருக்கும். ஆனால் இந்திரா காந்தியோ இலங்கையை தன் வசமாக்கிக் கொள்வதற்காக இங்கு ஆகக்குறைந்தது ஒரு தளத்தையேனும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு பல பிரயத்தணங்களை முடுக்கிவிட்டார். 

இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுதிலிருந்து தங்களுக்கு 50 : 50 அதிகாரம் வேண்டுமென்ற வி.ஜி. பொன்னம்பலம் அவர்களுடைய கோரிக்கையோடு வரலாற்றில் பல அஹிம்சைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதனை தக்கதருணமாய் எண்ணிய இந்திராகாந்தி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்குள் கவனமாக நுழைந்து, இலங்கையின் தமிழ் இளைஞர்களின் மத்தியில் பல குழுக்களை மூர்க்கம் கொண்டவர்களாக மாற்றி, இந்தியாவில் ஆயுதப் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டது. இது முழு இலங்கையிலுமே இரத்த ஆற்றை ஓட்டியது. 

ஆனால், தமிழ் மக்களோ பாவம். அவர்களின் விடுதலைக்கான உண்மையான ஆயுதப் போரட்டமாகவே அவர்கள் இதனை நம்பினார்கள். இருப்பினும், இந்திரா காந்தியினுடைய நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என்பதை அவர்கள் உணரத் தவறிவிட்டனர். முழு இலங்கையும் இந்தியாவை அப்படிப் பார்க்கின்ற மனநிலையில் இருந்திருக்கவில்லை. (நேச நாடு அல்லவா?) ஆனாலும் கால ஓட்டத்தில் இந்திராகாந்தியினுடைய வாரிசாக ராஜிவ்காந்தி அவர்கள் சிம்மாசனம் ஏறி இலங்கை தொடர்பாக தன் தாயின் நிலைப்பாட்டை பலப்படுத்தியிருந்தார். இதன் மூலம் இலங்கை - இந்திய ஒப்பந்தமும் நிர்ப்பந்திக்கப்பட்டது. இருந்தாலும், இந்திராவின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கு பிராயச்சித்தமாக ராஜிவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டார். இது எமது பார்வையில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல என்றாலும் கூட இந்திராகாந்தியின் உள்நோக்க செயற்பாடுகளினால் பலியாகிப்போன பலமான ஆத்மாக்களின் வேண்டுதலை அங்கீகரித்தாற்போல் இறைவனுடைய தர்ம செயற்பாடு அமைந்திருந்தது.

அன்று வடக்கு கிழக்கு மாகாண சபையின் தேர்தலிலே போட்டியிடுவதற்கு ஓரிரு குழுக்கள் மாத்திரம் களமிறங்கப்பட்டிருந்தன. இந்தியாவின் நிகழ்ச்சி நிரலையும் அதன் பின்னால் உள்ள உள்நோக்கத்தினையும் புரிந்து கொண்ட போராளிகளும், அவர் சார்ந்தோரையும் சுட்டுக் குவித்து எம் தாய் மண்ணிலே இரத்த ஆறு ஓடியதை இக்காலத்தில் வாழ்ந்தோர்கள் மட்டுமன்றி எதிர்காலத்தில் வசிப்போரும், வாசிப்போருமாக எளிதில் மறக்க முடியாத வடுவாக இது அமையப் பெற்றது. மனிதனின் உடற்பாகங்களை பச்சையாகவும், அழுகிய நிலையிலும் நாய் கவ்விச் சென்ற வரலாறுகளை மன்னித்தாலும் மறக்க முடியாது.

ஆயுதப் போராட்டம் என்ற பெயரில் குழுக்களாக அணிதிரண்டு பயிற்சி பெற்ற இளைஞர்கள் இன்றும் இருக்கிறீர்கள். இந்தியாவின் உள்நோக்கம் எங்களை விட உங்களுக்கே அதிகம் தெரியும். இன்றாவது தமிழ் சமூகத்திற்கு எத்திவைப்பதற்கு நீங்களும் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

எது எப்படி இருந்த பொழுதிலும், ராஜிவ்காந்தி மன்மோகன்சிங் போன்றோருடைய ஆட்சிக்காலத்திலும் சூடுகண்ட பூனை அடுப்பங்கரையை நாடாததுபோன்றே மேற்கத்தைய சக்திகளுக்கு இந்தியா விலைபோயிருக்கவில்லை.

உலகம் முழுவதை ஆழ்வதற்கும் அவர்கள் பின்பற்றுகின்ற மதத்தை மாத்திரம் பரப்புவதற்குமான மேற்கத்தைய நாடுகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனை சாத்தியப்படுத்துவற்காக உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் கலவரங்களை உருவாக்குவது, தாங்கள் பொலிஸ்காரராக வந்து நியாயம் பேசுவதுவும் ஒரு புறமிருந்தாலும், ஆயுத விற்பனையில் ஏராளமான இலாபம் ஈட்டிக் கொண்ட மேற்கத்தைய சக்திகள் அவர்களுடைய முயற்சியை தொடர்ந்து கொண்டே சென்றார்கள். இதனால் இந்தியாவிலும், பாகிஸ்தானுக்குள்ளும் காஷ்மீர் பிரச்சினை தீவிரமானது. 

அதேபோன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அங்கிருந்தே ஒருவர் உருவாக்கப்பட்டு அம்மாநிலத்தில் காரணமின்றி முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இவருடைய நடவடிக்கைகள் இஸ்லாமிய சட்டங்களை பலவந்தமாக மாற்றவருவதுபோல் அமைந்திருந்தது. மேற்கத்தைய, அமெரிக்கா போன்ற நாடுகள் குஜராத்தில் தான் வளர்த்த மோடியையே முழு இந்தியாவிற்கும் தலைவராகக் கொண்டு வருவதற்கு உற்சாகத்தோடு தொழிற்பட்டு பிரதமராகவும் ஆக்கினார்கள்.

எந்த மேலாதிக்க வல்லரசு சக்திகளிலிருந்து விடுதலை பெறவேண்டுமென்று முழு பாரதமும் மகாத்மாவின் தலைமையில் போராடியதோ அந்த சக்திகளுக்கே இன்று மோடி முழு நாட்டையும் தாரை வார்த்திருக்கிறார். பாரதத்தின் மக்கள் மாத்திரமன்றி, விஷேடமாக தென்கோடியில் வாழும் என் உடன்பிறப்பு தெள்ளுதமிழரும் இதனை உணர்ந்து கொள்வர். சுதந்திரற்காய் அன்று போராடிய நம் மூத்த போராளிகளின் ஆத்மா சாந்தி பெறவேண்டுமென்ற அவசியத்தையும் ஒப்புக் கொள்வர். தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், அர்ப்பணிப்புடன் பாரதத்திற்கு செய்வதை விடவும் தன்னை செல்லப்பிள்ளையாக வளர்க்கின்ற எஜமானர்களுக்கு அர்ப்பணிப்புடன் தொழிற்படுவதை நீங்கள் காணவில்லையா?

குஜராத்தின் கரைபடிந்த வரலாற்றை மறந்தவர்களாக அந்நாட்டின் முஸ்லிம் மக்கள், புதுயுகம் படைக்கவென்று மோடியை பிரதமராக்க அவர்களும் வாக்களித்திருந்தார்கள். பாவம் அவர்கள். மோடியினுடைய உள்நோக்கத்தைப் புரிந்திருக்கவில்லை. அவர் பின்னால் மேற்கத்தைய சூழ்ச்சிக்காரர்கள் ஒழிந்திருப்பதனை கண்டு கொள்ள முடியாமல் போய்விட்டது.

இதனால், மோடி பலம் பொருந்திய ஒருவராக மாறினார். முஸ்லீம்களுடைய ஷரீஆ சட்டங்களையும் கேலி செய்து முதலைக் கண்ணீரும் வடித்தார். உணவுக்காய் மாடு அறுக்கின்ற விவகாரம் முஸ்லிம்களின் முத்தலாக் போன்ற விடயங்களிலும் மூக்கை நுழைத்தும் முஸ்லிம்களை ஒடுக்குவதற்கான மேற்கத்தைய சக்திகளின் வழிகாட்டலில் இந்து இனவாதக் குழுக்களும் பலப்படுத்தப்பட்டன.

இது இவ்வாறிருக்க, 
இலங்கையில் பயங்கரவாதம் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்பட்டு ஆயுத கலாசாரம் அடங்கிப் போனது. நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழர் சமூகமும் ஏனைய சமூகங்களும் சுதந்திரமான காற்றை சுவாசிக்கத் தொடங்கினர். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத மேற்கத்திய சக்திகளாலும், அவர்களுடைய நேசர்களாலும் இலங்கை அரசியலுக்குள்ளும் மோடி நுழைய வைக்கப்பட்டார். அது, அவர்களின் அபிலாஷையை அடைந்து கொள்வதற்கு அவர்கள் ஏலவே தீட்டிய திட்டங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. அவர்களின் ஆலோசனைக்கமையவே இனக்கலவரங்களை உருவாக்குவதற்கு பல இனவாத சேனாக்கள் இலங்கையில் உருவாக்கப்பட்டனர். 

இதனால் இஸ்லாமியர்கள் கிள்ளுக்கீரைகளாக மாறினர். முஸ்லிம் உம்மா நொந்தும் போனது. தமிழ் மக்கள் மீண்டும் ஏமாளிகளாக்கப்பட்டனர். மிகக் கவனமாக இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று உருவாக்கப்பட்டது. இது இன்று எல்லோரும் அறிந்த பலவீனமாக ரகசியமாகும். இதனால் இலங்கை நாடு இன்று அரசியலில் பலவீனப்படுத்தப்பட்டு எடுப்பார் கைப்பிள்ளையாக மாறி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

இது இவ்வாறிருக்க, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான ஒப்பந்தங்கள் என்றும் மக்கள் நலன்காக்கும் திட்டங்கள் என்றும் இந்தியா பசப்பு வார்த்தைகளைச் சொன்னாலும் இலங்கையில் ஒரு துண்டு நிலப்பரப்பு வேண்டுமென்பதே அவர்களுடைய உள்நோக்கம் என்பது இன்று எல்லோரும் அறிந்த உண்மையாகும். 

எது எவ்வாறு இருந்த போதிலும்,  நான் ஏலவே குறிப்பிட்டதைப் போல் உருவத்தால் நிறத்தால், குணத்தால், மனத்தால் ஒருமைப்பாடுடைய நமது நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுவதிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டுவதில் எந்தத் தப்புமில்லை. ஆனால், மோடியுடைய நகர்வானது எதனை மையமாகக் கொண்டது என்பதனையும் அவர் பின்னுள்ள சக்திகளின் கொடூர சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் இந்நாட்டு மக்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளனர். இதனால் இலங்கை நாட்டின் பெருங்குடி மக்களின் பெரும் பகுதியினர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது அவரை வரவேற்கும் மனநிலையில் இருந்திருக்கவில்லை.

மோடி அவர்களின் இலங்கை விஜயத்தின் போது, அவரின் கொள்கைக்குள் உள்வாங்கப்பட்டவர்கள் பயத்தால் முண்டியடித்துக் கொண்டு அவரை வரவேற்றார்கள். அதற்கும் காரணங்கள் பல உண்டு. (அதனை வேறாகப் பேசுவோம்) முஸ்லிம்களின் சார்பாகவென்று முகம்காட்டி வரவேற்க சிலரின் "நப்ஸ்" துடித்திருக்கும். இதுவரை தான் ஒழித்து விளையாடிக் கொண்டிருக்கின்ற சில சம்பவங்கள் இன்னும் உறுதியாக தன் சமூகத்துள் புகுந்து உறுதிப்படுத்துவிடும் என்பதற்காக "இந்நப்ஸ்" கவனமாகக் கையாளப்பட்டது. தமிழ் மக்களின் அபிலாஷைகளும் முன்னோர்களின் காத்திரமான போராட்டங்களும் மழுங்கடிக்கப்பட்டு வடக்கு கிழக்கில் தமிழ்த்தாயின் பிள்ளைகள் வெவ்வேறு குழுக்களாக மோதவைத்து இரத்த ஆற்றை ஓட வைத்த வரலாற்று சோகத்தின் சூத்திரதாரி இந்தியாதான் என்பதனை அச்சமூகத்தின் புத்திஜீவிகளும் புரிந்திருக்கிறார்கள். இதனால் ஆரவாரமாக மோடியை வரவேற்கும் மனநிலையில் அவர்களும் இருந்திருக்கவில்லை.

வடக்கு கிழக்கில் வாழும் மூவின மக்களினதும் அபிலாஷைகளை அறிந்து கொள்ளாமல் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மாத்திரம் முன்னுரிமை கொடுத்து மேற்கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை இன்று எல்லோரும் விளங்கிக் கொண்டார்கள். பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரமன்றி முழு நாட்டினதும் வரலாற்றுக் கரையென அவர்கள் முகம் சுழித்துக் கொண்டார்கள். அவ்வொப்பந்தத்தில் சில நலவுகள் தமிழர்களுக்கு இருந்ததுதான் என்று பார்க்கப்பட்டாலும் கூட இனங்களை மூட்டிவிட்டு அந்த அழிவுகளின் மூலம் பிடுங்குவதில் இலாபம் என்ற தந்திரோபாய செயற்பாடுகளின் கொடூரத்தை ஞாபகப்படுத்திக் கொண்டார்கள். 

இலங்கையின் படைவீரன் ஒருவன் அன்றைய பாரத்தின் பிரதமர் ராஜிவ்காந்தியை துப்பாக்கியால் தாக்கிய துயரமான சம்பவத்தை மீட்டுப் பார்த்தார்கள். இந்தியாவின் தூண்டுதலினால் ஏற்பட்ட கலவரங்களில் இந்த நாட்டின் பல்லின மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டதையும் அதேவாறான தொகையினர் ஊனமுற்றிருப்பதையும் எண்ணிப் பெருமூச்சு விட்டனர். இதுவொரு புறமிருக்க, இன்று - வருவது அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான மோடி என்று தெரிந்து கொண்டதனால் அவர்கள் அந்த நாளை அருவருப்போடு நோக்கினர். அயல்நாட்டுத் தளபதியின் அன்பான வருகையாக அவர்களால் பார்க்க முடியாமல் போனது.

தனது அண்டை நாடான இலங்கையைப் பற்றியும், அங்கு வாழும் மக்களினுடைய சகவாழ்வு தொடர்பாகவும் அயல் வீட்டான் போன்று பார்க்க வேண்டிய பாரதம், உலகில் பெரும் நிலப்பரப்பைக் கொண்டது. அந்நிலப்பரப்பும் போதாதது போல் இந்த சிறிய இலங்கை நாட்டின் வளங்களில் ஒன்றான எண்ணெய்க் குதங்களையும் அதனோடு சேர்த்து திருகோணமலையின் துறைமுகத்தையும் கபளீகரம் செய்வதற்கு அவர்களின் முன்னோர்கள் முற்பட்டதனை விடவும் மோடி அவர்கள் முழுமூச்சாக செயற்படுவதானது தன்னை செல்லப் பிள்ளையாகப் பார்க்கும் எஜமானர்களுடைய பெரும் பலம் அவர் பின்னால் இருப்பதனை நிரூபித்திருக்கிறது. இது சந்தேகத்தை அல்ல வெறுப்பையே தோற்றுவிக்கிறது.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு கிழக்கில் பலாத்காரமாக வந்து நுழைந்த இந்தியப் படையின் அட்டகாசம் அங்கு வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் மாத்திரமல்ல மண்ணும் சாட்சி சொல்லும். மழை பொழியும் வழக்கத்திற்கு மாறாக மனித இரத்தம் அம்மண்ணில் கலந்ததனால் ஏற்பட்ட ஒவ்வாமையினை உலகம் அழியும் வரை அம்மண் பரைசாற்றிக் கொண்டிருக்கும். உலகம் முடிந்த பின்னும் இவ் அதர்மச் செயல்களைச் செய்வதற்கு காரணமாக இருந்தவர்கள் மறு உலகிலும் கேள்விக்குற்படுத்தப்படுவர்.

இந்த நாட்டில் அதிகம் வாழுகின்ற மக்கள் கௌத்தம புத்தபிரானுக்கு பெரும் கௌரவமும் மதிப்பும் வழங்கி அவரையே வழிபடுகின்றனர். மனிதாபிமான செயற்பாடுகளுடைய கௌத்த புத்தரின் வெசாக் தினத்திற்கு மோடி அவர்கள் கவனமாக நுழைந்திருக்கிறார். வெறும் நடிகனாக அல்லாமல் மனிதநேயமுள்ள பாரதத்தின் எந்த மகாத்மாவையும் நேசத்தோடு வரவேற்பதற்கு இந்நாட்டு மக்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்.

இலங்கை வருகையின் போது, மோடியினுடைய பேச்சு வியப்பாகவும் வேடிக்கையாகவும் அமைந்திருந்தது. இலங்கை சிறிய நாடாக இருந்தாலும் மாகாணங்கள், மாவட்டங்கள், மாநகரங்கள், கிராமங்கள் தோறும் முடியுமானவரை வைத்தியசாலைகளும், வைத்திய சேவைகளும் அதி உச்சமட்ட கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது என்பதை விடவும், கூடுதலான மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பதனை பாரத மக்கள் ஒப்புக் கொள்வார்கள். தங்களது பாரத நாடு நிலத்தால் விரிந்தும், வளத்தால் செறிந்தும், உலக வரிசையில் மக்கள் கூட்டமும் பெருகிக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், அந்தப் பெரும் நிலப்பரப்புக்கே இவ்வாறான வைத்திய வசதிகளை ஆவலாக எதிர்கொண்டு மக்கள் வாடிக் கொண்டிருக்கின்றனர். 

எங்குமில்லாதவாறு விவசாயிகள் வீதிகளில் இறங்கி தாய் பெற்றெடுத்த மேனியோடு மாத்திரம் போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழ் நாடு சின்னாபின்னமாக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. இது போன்று இன்னும் பல. எல்லாவற்றிற்கும் முறையான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். அது ஒரு புறமிருக்க, இலங்கையின் மக்களுக்கு அம்புலன்ஸ் சேவையினை வழங்குவதாக நீங்கள் கூறியிருப்பது வேடிக்கையானது.

மேலும், களத்தில் - பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களை மாத்திரம் குசிப்படுத்த வரையறுத்து பேசியது போன்றே மோடியின் உரை அமைந்திருந்தது. இந்துக்களையும், பௌத்தர்களையும் ஒன்றுபடுத்தி கூறியதானது வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், உள்நோக்கம் கொண்டதாகவும் மனதின் வெளிப்பாடாகவும் அமைந்திருந்தது. முஸ்;லிம்களின் மேல் அவருக்கு மனிதாபிமான உணர்வுகளாவது இருக்குமா என்ற சந்தேகத்தை தோற்றுவித்திருக்கிறது. இந்தியாவில் பல்வகை மொழிகளைப் பேசுகின்றவர்களும் வௌ;வேறான மத வழிபாடுகளைக் கொண்டவர்களாகவும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

அதேபோன்றுதான் இலங்கையிலும் பௌத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய பேச்சில் இங்கு வாழுகின்ற மற்றவர்களை திட்டிவிட்டுச் சென்றிருந்தாலும் கூட நாங்களும் கவலைப்பட்டிருக்க மாட்டோம். ஏனெனில் இங்கு மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதனை அவர் ஒப்புக் கொண்டதற்காக ஒரு பாஸ் போடக்கூடியதாகவும் இருந்திருக்கும். ஆனால் மோடி அவர்களோ இந்த மண்ணில் வேறு எந்த சமூகங்களும் வாழ்வதாக அவர் காட்டிக் கொள்ளாதது பெரும் வேதனையைத் தருகிறது.

மேலும், இலங்கை - இந்திய வரலாற்றுத் தொடர்புகள் சம்பந்தமாக குறிப்பிடுகின்ற பொழுது இலங்கைக்கு இந்திய முஸ்லிம்கள் வருகை தந்தது பற்றியோ இந்த நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெழும்பாக அவர்கள் இருந்தது பற்றியோ பேசியிருக்கவில்லை. ஆகக்குறைந்தது, பாரதத்தில் மொஹலாய சாம்ராஜ்யம் போன்ற இன்னும் பல ஆட்சியாளர்களையும் அவர்களால் உருவாக்கப்பட்ட அடையாளங்களில் எஞ்சியிருக்கின்ற தடயங்களால் இந்தியா புகழடைந்து கொண்டிருப்பதனையும் ஒரு கனம் மறந்ததாகவும் மோடி அவர்களுடைய பேச்சு அமைந்திருந்தது. இவ்வாறு பல்லினங்கள் வாழுகின்ற நாடுகளின் தலைவர்கள் அதேபோன்றே இனங்கள் வாழுகின்ற ஒரு நாட்டில் எவ்வாறு உரையாற்ற வேண்டும் என்கின்ற வரையறைகளை மேற்கத்திய சூழ்ச்சிக்காரர்கள் தகர்த்தெறிந்திருக்கிறார்கள். பாரதமமே விழித்தெழு!

பல்லின கலாசாரங்களோடு பன்மொழி பேசுகின்ற சமூகத்தவர்களும் அதிகமதிகம் வாழ்ந்து வருகின்ற பாரதத்தில் தலைவர் ஒருவர், இலங்கை போன்ற நாட்டிலே உரையாற்றுகின்ற பொழுது அது காத்திரமான உரையாக இருக்க வேண்டும். பின்புலமில்லாத முழு ஆளுமையோடு பேசுகின்ற பொழுது அதில் உயிர் இருக்கும். இலங்கை - இந்திய உறவு மாத்திரமல்லாமல் இந்தியா – பாகிஸ்தானுடைய உறவு பற்றியும் பேசுகின்ற யதார்த்தமான பேச்சாக அமைந்திருக்கும். இலங்கையில் தமிழர் முஸ்லிம்கள், மலையகத் தமிழர் எல்லோருக்குமான தீர்வுபற்றிய நியாயத்தினை முதுகெலும்போடு பேச வைத்திருக்கும். வெறுமனே மேடைப்பேச்சாக இல்லாமல் வரலாறு மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்க்கக் கூடியதான வரலாற்றுப் பேச்சாக அது அமைந்திருக்கும். நான் முன்பு சொன்னது போல ஒரே மண்ணில் உதித்த இனங்களுக்கான பேச்சாக அது அமைந்திருக்கும். இனம் என்பதற்குரிய வரைவிலக்கணமும் இதுவே. 

எனவே, ஒரே மண்ணின் வாசனை இருந்தும் வெவ்வேறு நாடுகளாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் நமது மக்களுக்கு தலைமை கொடுப்பதற்கு பாரதத்தில் இன்னுமொரு மகாத்மா உருவாக வேண்டும் என்பதனை மோடியின் செயற்பாடுகள் உறுதி செய்திருக்கிறது. அப்பொழுதுதான் பாகிஸ்தானில் வாழுகின்ற எல்லா சமூகங்களும் நம்மவர் என்கின்ற உணர்வோடும் குஜராத்திலும் இந்தியா முழுவதிலும் வாழ்கின்ற மக்கள் நம் உடன் பிறப்புக்கள் என்ற வாஞ்சையோடும், இலங்கையில் வாழுகின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களும் நம் சகோதரர்கள் என்கின்ற ஐக்கியத்தோடும் வாழ்வதற்கான வழி திறக்கும். இந் நாடுகளில் புறையோடிப் போயிருக்கின்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து ஆயுத கலாசாரத்திற்கு அப்பால் மனித நேயத்தோடு அஹிம்சை வழியில் வெற்றிகளைக் குவிக்க முடியும். அவ்வாறான ஒரு மகாத்மாவினால்தான் இப்பிராந்தியத்தின் நாடுகளை ஒற்றுமையாக வாழ வைக்க முடியும்.

இதற்கு மோடி மகாத்மாவாக வேண்டும். ஆனால் சாத்தியப்பாடுகள் அதிகம் இல்லை. மோடி நேருவாக மாறினாலும் ஒரு மகாத்மா தேவைப்படுகிறது. முழுப் பாரதமுமே அம் மகாத்மாவை உருவாக்குவதற்குப் பாடுபட வேண்டும். இல்லையெனில் இந்நாடுகளுள் எங்கோ ஒரு மூலையிலாவது ஒரு மகாத்மா உருவாவதற்கு வழிவிட வேண்டும்.

ஏனெனில், உலக நகர்வுகள், பிராந்தியத்தின் அசைவுகள் எல்லாம் யுத்தங்களை முன்னோக்கியதாக நகர்ந்து கொண்டிருக்கிறது. மோடி இந்தியாவை மாத்திரமன்றி இலங்கையையும் யுத்த பூமியாக்க விளைவது பாரதத்தின் தேவைக்காக அன்றி சூழ்ச்சிக்காரர்களின் தேவைக்காக என்பது நன்றாகவே புலனாகிறது. இலங்கைத் தமிழர் சமூகத்திற்கான விடுதலைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய மார்க்கமானது மோடி போன்றவர்களின் கையில் இல்லை என்பதனைப் புரிவது காலத்தின் தேவையாகும். இதேபோன்றுதான் முஸ்லிம்களும் உணர வேண்டும். அதேபோன்று நம் நாட்டின் சிங்கள சமுதாயமும் வரலாற்றில் இதனை எழுதி வைப்பர். 

வேட்டு சத்தங்கள், இப்பொழுதெல்லாம் எங்களுக்கு கேட்பதில்லை. கோர யுத்தத்தினையும் அழிவுகளையும் கண்களால் கண்டவர்கள் நாங்கள். வரலாற்றில் அதனுடைய வடுக்களையும் சுமந்திருக்கிறோம். பிறரின் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்காக வீசப்பட்ட சூழ்ச்சி வலைகளுக்குள் அகப்பட்டு பல இனக்கலவரங்களையும் வெறுத்தொதுக்க வேண்டிய ஈனச் செயற்பாடுகளையும் அனுபவித்தவர்கள் இந்நாட்டு மக்கள். இயற்கையாக நம்மீதுள்ள போர்க்குன வீரச் செயற்பாடுகளை மற்றவர்கள் பயன்படுத்தி நாட்டு மக்கள் இரையாக முடியாது. 

ஆகக்குறைந்தது எங்கள் வீட்டின் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்து இயற்கையான காற்றை சுவாசிப்பதற்கு நாங்கள் விரும்புகிறோம். விட்டுவிடுங்கள் எங்களின் திருமலையின் துறைமுகத்தை. மற்றுமொரு மகாத்மா வரும்வரை. இப்படிக் கூறியதற்காக சாதி, சனம் என்ற பசப்பு வார்த்தைகளைப் பேசி அவர்களுக்கு உதவி செய்வதாகக் கூறும் போர்வையில் மலையக மக்களும் ஆக்கிரமிக்கப்படக்கூடாது. மீண்டுமொரு மகாத்மா வரும்வரை.
தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான 
ஏஎல்எம். அதாஉல்லா அவர்களின் ஊடகப் பிரிவு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -