நிந்தவூர் பொதுச் சந்தையால் அவதிப்படும் மக்களும், வியாபாரிகளும் - அரசியல்வாதிகள் எங்கே

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-

தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிந்தவூர்ப் பொதுச் சந்தையானது நிந்தவூரின் பிரதான வீதியிற்கு மேற்குத்திசையிலுள்ள பொட்டைக்குளம் எனும் சதுப்பு நிலம் சார்ந்த நெல்வயல் பகுதியில் கடந்த 2010ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன், நெக்டொப், கடந்த அரசின் புறநெகும திட்டம், பிரதேச சபை நிதி போன்றவற்றின் பங்களிப்புக்களுடன் அழகியதோர் சந்தை அமைக்கப்பட்டு, கடந்த 2011 ஜனவரி 05ந் திகதி மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த 03 ஆண்டுகளாக இப்புதிய சந்தையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வியாபாரிகள் சிலர் இன்று பொதுச் சந்தையை விட்டு வெளியேறி, பிரதான வீதியின் இரு மருங்கிலும் கூடாரங்களை அமைத்தும், பொட்டிக் கடைகளை உருவாக்கியும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னும் சில வியாபாரிகள் நிந்தவூரில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளான மாந்தோட்டச் சந்தி, அலியாண்ட சந்தி, உசனார சந்தி, தியேட்டரடி, ஜமால் பேப்பர் கடையடி போன்ற பகுதிகளில் புதிய மினிச் சந்தைகளை அமைத்து, வெகு ஜோறாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களும் நிறைவாகப் பொருட்களை நுகர்ந்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

பல இலட்சங்கள் செலவிட்டு புதிதாக அமைக்கப்பட்ட பொதுச் சந்தை நுகர்வோர் இன்றி வெறிச்சோடிக் கிடக்கும் இதேவேளை ஊருக்குள் புதிது புதிதாக உருவாகியுள்ள மினிச் சந்தைகளில் மக்கள் நிரம்பி வழிகின்றனர். வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.

ஊருக்கு வெளியே (மக்கள் செறிந்து வாழும் பகுதிக்கு அப்பால்) இருக்கும் பொதுச் சந்தையை விட உள்ளுர் மினிச் சந்தைகளில் அதிகளவிலான மக்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக் காரணம்

(1). பொதுச் சந்தை பிரதான வீதிக்கு மேற்கே அமைந்துள்ளதால் பிரதான வீதியைக் கடந்து செல்ல வேண்டிய தேவை உள்ளது.

-02- (2). மோட்டார் சைக்கிளில் சென்று பிரதான வீதியைக் கடப்பதானால் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். தலைக்கவசம் அணியத் தவறுவோர் வீதிப் போக்கு வரத்துப் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு ஆழாகுவர். பொலிஸ் நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் அலைய வேண்டிய நிலை உருவாகும். இதனால் வீனான அலைச்சலும், பணவிரயமும் ஏற்படுகிறது.

(03).பிரதான வீதி அதிவேகப் பாதையாகக் காணப்படுவதனால் வீதிப் போக்கு வரத்துச் சட்டங்களை அறிந்திராத சாதாரன பொது மக்கள் வீதிகளைக் கடக்கும் போது, அல்லது சட்டதிட்டங்களை மதிக்காமல் கண்மூடித்தனமாக வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளால் மக்கள் விபத்துக்களில் மாட்டிக் கொள்கின்றனர். இவ்வாறு இந்த இடத்தில் சில உயிர்கள் காவுகொள்ளப்பட்டதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

(04). இதே வேளை வீதியோரச் சந்தைகள், மினிச் சந்தைகளை விட பொதுச் சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகம் என்றொரு கருத்தம் நிலவுகிறது.

இது போன்ற பல காரணங்களால் நிந்தவூரிலுள்ள அதிகமான பொது மக்கள் பொதுச் சந்தையை வெறுத்து, புதிதாக உருவாகி வரும் மினிச் சந்தைகளில் இலகுவாகப் பொருட்களை நுகர்ந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர். இதே வேளை மினிச் சந்தைகளில் நியாயமான விலைகளில் பெண்களும், சிறுவர்களும் மிக விருப்போடு பொருட்களை நுகர்ந்து வருகின்றனர்.

இவைகளை வைத்துப் பார்க்கும் போது 2010ம் ஆண்டு பல இலட்சங்களோ, அல்லது கோடிகளோ செலவிட்டு உருவாக்கப்பட்ட பொதுச் சந்தைப் பிரதேசம் உண்மையில் மக்கள் செறிந்து வாழாத ஒரு வயல் தரையாகவும், கால் நடைகளின் மேச்சல் தரையாகவுமே காணப்படுகின்றது. இந்த இடத்தில் இப்பொதுச் சந்தை எவ்வளவு பொருத்தம்? என்பதனை இன்று நிந்தவூர் மகா ஜனங்கள் உணர்ந்துள்ளனர்.

உண்மையில் இச்சந்தை மக்களின் தேவை கருதி உருவாக்கப்பட்டதை விட யாரோ சிலர் அவர்களின் சட்டைப் பைகளை நிரப்பிக் கொள்ள உருவாக்கப்பட்டதாகவும், அவர்களின் சுயநலன் கருதியே இவ்விடம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவுமே மக்கள் கருத்து வெளியிடுகின்றனர்.

-03-

மக்களின் இந்தக் கருத்துக்களில் உண்மை இருப்பதாகத் தெரிகிறது. காரணம் அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பொது மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வது வழக்கமாகும். அது மாத்திரமின்றி வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பே 'திட்ட பெயர் பலகையில்' திட்டத்தின் பெயர், நடைமுறைப்படுத்தும் இடம், ஒப்பந்தகாரர் பெயர்,விபரம், நிதித்தொகை, நிதிஒதுக்கீடு செய்வோர் விபரம், பங்காளிகள் விபரம், ஆரம்பிக்கும் திகதி, முடிவுறும் திகதி போன்ற விபரங்கள் அடங்கியிருப்பது வழக்கம். ஆனால், நிந்தவூர் பொதுச் சந்தைக்கு முன்னால் இடப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் திட்டத்திற்கு நிதியுதவி செய்யும் நிறுவனம், அதன் பங்காளி நிறுவனம் போன்ற விபரத்தைத் தவிர வேறு எந்தத் தகவலும் அதில் இருப்பதாகத் தெரியவில்லை.

இதுபற்றி நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீருடன் தொலைபேசி மூலம் பல முறை தொடர்புகளை ஏற்படுத்தி, சந்தை விபரங்களை அறிய முயற்சித்தேன். முடியவில்லை!?

அதன் பின்னர் பிரதேச சபையின் அதிகாரத்திலிருந்த அன்றையச் செயலாளர் எம்.ஜஃபர் ( 067 2250035) அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டேன். 'நான் 2013ம் ஆண்டுதான் இப்பிரதேச சபைக்கு வந்தேன். இச்சந்தை 2012ம் ஆண்டு திறக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய விபரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது' எனத் தெரிவித்தார்.

இது குறித்து தொழிநுட்ப உதவியாளர் எம்.முத்தலிப் அவர்களிடம் நேரடியாகக் கேட்டேன். 'காலங்கடந்து விட்டதால் இதுபற்றிய விபரங்களைத் தேடிப்பார்க்காமல் சொல்ல முடியாது' எனத் தெரிவித்தார்.

தற்போது உள்ளுராட்சி உதவியாளராகப் பணியாற்றும் திருமதி.சல்மா சதாத்திடம் ( 0672250035 ) தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டேன். 'இச்சந்தையில் உள்ள கட்டிடங்களில் ஒன்று ஐரோப்பிய யூனியன் உதவி, மற்றய ஒன்று நெக்டொப் உதவி, இன்னுமொன்று புறநெகும திட்டத்தினால் கிடைத்தது, 4வது கட்டிடம் பிரதேச சபை நிதியில் கட்டப்பட்டது. நிறுவனங்கள் கட்டடங்களைக் கட்டி முடித்த பின்னர் எம்மிடம் ஒப்படைத்தனரே தவிர, அவர்கள் அதற்குச் செலவிட்ட தொகை விபரங்கள் பற்றி எமக்குத் தெரிவிக்கவில்லை' எனத் தெரிவித்தார். இது விடயமாக குரல் பதிவு செய்ய முயற்சித்தேன். தன்னுடைய நிறுவனத் தலைவரின் உத்தரவின்றி குரல்பதிவு தர முடியாது என மறுத்து விட்டார்.

-04-மேலுள்ள விடயங்களை வைத்து சிந்திக்கும் போது யாரோ? யாரின் நன்மைக்கோ இவைகளை உருவாக்கியுள்ளனர் என்பதும், செலவிட்ட நிதி விபரம் மூடு மந்திரமாக இருப்பதனால் இதில் எங்கோ நிதிமோசடி இடம் பெற்றிருக்கலாமென மக்கள் பேசிக் கொள்வதில் நியாயமுள்ளது.

பொதுச் சந்தையை விட மினிச் சந்தைகளில் வியாபாரம் சிறப்பாக நடைபெறுவதை அறிந்த பொதுச் சந்தையிலுள்ள கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, வெட்டுமீன், தேநீர்க் கடை போன்றவற்றின் ஏனைய வியாபாரிகள் ஒன்று சேர்ந்து இச்சந்தைக்குப் பொது மக்கள் வருகை குறைவாக இருப்பதனால் தாம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும் கடன் சுமைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, ஊரின் பல இடங்களில் செயற்பட்டுவரும் மினிச் சந்தைகளை நிறுத்த வேண்டும், இல்லையேல் தமக்கும் பழைய இடத்தில் அல்லது வேறு பொருத்தமான இடத்தில் சந்தை அமைத்துத் தரவேண்டும் என பிரதேச சபையிடம் முறையிட்டனர்.

இதனால் பிரதேச சபைச் செயலாளர் பொலிசாரின் உதவியோடு வீதியோர மினிச் சந்தைகளை மூடுவதற்கு பல முறை பல பிரயத்தனங்களை மேற்கொண்டார். இதனால் மினிச் சந்தை வியாபாரிகளுக்கும், பிரதேச சபை உத்தியோகத்தர்களுக்கும், பொலிசாருக்குமிடையில் முறுகல் நிலை உருவானது. இவ்வேளையில் ஒரு மீன் வியாபாரி ' தன்னுடைய இந்தத் தொழிலைத் தடுத்தால் தான் தீக்குளிக்கப் போவதாகக் கூறி ' பெற்றோல் கலனுடன் காணப்பட்டார்.

இவ்வாறான சூழலில் கடந்த 2016.08.12ந் திகதி பொலிசார், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.தஸ்லிமா, பொதுச் சுகாதாரப் பரிசோதகர், உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள், பொதுச் சந்தை, மினிச் சந்தைகளில் வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள மீன்வியாபாரிகள், மற்றும் ஏனைய வியாபாரிகள் போன்றோரைப் பிரதேச சபைக்கு அழைத்து ஒரு சமரச முடிவுக்கு வந்ததாகவும், அதனால் தற்போது ஊரிலுள்ள மினிச் சந்தைகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், எல்லோரும் பொதுச் சந்தைக்கு வந்து தமது தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதாகவும், தற்போது பொதுச் சந்தையில் மட்டும் வியாபார நடைமுறை சுமுகமாக நடைபெறுவதாகவும் பிரதேச சபைச் செயலாளர் எம்.ஜஃபர் தெரிவித்தார்.( குரல் பதிவும் தந்துள்ளார் ).

ஆனால். இன்னும் (இன்றும்) கூட பிரதான வீதி இருமருங்குகளிலும் மீன் வியாபாரம், மரக்கறி, பழவகை, பாட்டா வகை, விளையாட்டுப்

-05-பொருட்கள் போன்ற பலசரக்கு வியாபாரம் நடைபெறுவதைக் காணக் கூடியதாக இருப்பதோடு, பல மீன் வியாபாரிகள் தமது பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

யார் எதைத்தான் சொன்னாலும் சில உண்மைகளை உரியவர்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

பல இலட்சங்களை, அல்லது கோடிகளைச் செலவிட்டுக் கட்டிய இப்புதிய சந்தைக் கட்டிடம் பொது மக்கள் செறிந்து வாழாத ஒரு ஒதுக்குப் புறத்தில் அமைந்துள்ளதாலும், ஊருக்குள் தமது காலடிகளில் வியாபாரிகள் பொருட்களைக் கொண்டு வந்து, நியாய விலைகளில் விற்பதாலும் பொதுச் சந்தை வியாபாரிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டும் உண்மை!

இப்பொதுச் சந்தை அமைக்கப்படுவதற்கு முதல் அரச சார்பற்ற நிறுவனங்கள் நிந்தவூர் பொது மக்களின் அபிப்பிராயங்களைப் பெற்றிருக்க வேண்டும். இதே வேளை அப்போதிருந்த அரசியல் தலைமைகள் ஒற்றுமையாக செயற்பட்டு, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழி காட்டியிருக்க வேண்டும்.

இன்னும் 42.9 ஸ்கெயார் கிலோ மீற்றர் பரப்பளவையும், 25 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டு, பரந்து விரிந்த நிந்தவூர் பிரதேசத்தில் வாழும் சுமார் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாவனைக்காக ஒரு சந்தை மட்டும் போதாது. எனவே மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பெண்கள், சிறுவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மாலை வேளையிலும் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடியவகையில் பொருத்தமான இடங்களில் ஒன்றோ, அல்லது இரண்டோ மினிச் சந்தைகள் உருவாக்கப்படுவது காலத்தின் தேவையாகும்.

இவ்வாறு செய்வதன் மூலம் பொது மக்கள் நன்மை அடைவதுடன் வியாபாரிகளின் வாழ்வும் வழம் பெறும் என்பதில் ஐயமில்லை. இதனை விட்டு விட்டு பொலிசாருடனோ அல்லது பிரதேச சபை உத்தியோகத்தர்களுடனோ வியாபாரிகள், அல்லது பொது மக்கள் முரண்படுவதில் அர்த்தமில்லை.

பொது மக்களுக்குப் பொருத்தமான இடத்தில் பொதுச் சந்தை அமைத்துக் கொடுப்பதைத் தவிர்த்து விட்டு, கடமை நிமித்தம் வெளி ஊர்களிலிருந்து வந்திருக்கும் உத்தியோகத்தர்களின்( செயலாளர், பிரதம இலிகிதர் போன்றவர்களின்) தூண்டுதலால் பொலிசார்

-06- வரவழைக்கப்பட்டு, வீதிகளிலும், தாமாகவே உருவாகியிருக்கும் மினிச் சந்தைகளிலும் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் விரட்டியடிக்கப்படுவதும், அமைக்கப்பட்டிருக்கும் புதிய சந்தைக்கு மக்களும், வியாபாரிகளும் வருகிறார்கள் இல்லை என்பதற்காக இவர்களைப் பழிவாங்கும் நோக்கோடு பெரும்பாண்மை இனத்திலுள்ள வியாபாரிகளைக் கொண்டு வந்து வாரத்தில் ஒரு நாள் சந்தை (செவ்வாய்க் கிழமை சந்தை) அமைத்துக் காட்டுவதும் ஒரு சிறந்த தீர்வாகாது.

எனவே, இன்று அபிவிருத்தி என்ற தோரணையில் பல கோடிகளைக் கொண்டு வந்து வயல் நிலங்களிலும், காடுகளிலும், கடலிலும், கடற்கரை மணலிலும், களப்புகளிலும் கொட்டி, கட்டடங்களை அமைத்து வரும் இப்பிரதேச அரசியல்வாதிகள் ஏன் தங்களுக்கு வாக்களித்துப் பாராளுமன்றம் அனுப்பி, அமைச்சராக்கிய இம்மக்களையும், வியாபாரிகளையும் கவனத்தில் கொள்ளாதது பெரும் கவலையான விடயமாகும் என கல்வியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இது மாத்திரமன்றி முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய நிந்தவூர் மக்களுக்கு இப்பொதுச் சந்தையை அமைத்துக் கொடுப்பதற்கான கடமைப்பாடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நீர் வழங்கல், நகரத் திட்டமிடல் அமைச்சருமான றவூப் ஹக்கிம் அவர்களுக்கும் உள்ளது என்றால் அது மிகையாகாது.

எனவே, இந்தச் சந்தை விடயத்தில் நிந்தவூர் ஜும்ஆப்பள்ளி வாசல் நிருவாகம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நீர் வழங்கல், நகரத் திட்டமிடல் அமைச்சருமான றவூப் ஹக்கிம், சுகாதாரப் பிரதி அமைச்சர் பைசால் காசீம், முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி, மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், முன்னாள் பிரதேச சபைத் தலைவர் எம்.ஏ.எம்.தாஹீர், ஊர்த்தனவந்தர்கள், கல்விமான்கள், பொதுத் தொண்டர் நிறுவனங்கள் போன்றோர் கூடிய கவனஞ் செலுத்தி இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -