ஞானசார தேரர் பேசியதன் பின்னணியே பள்ளிவாசல் மீது தாக்குதல் - முஜிபுர் ரஹ்மான்

கொஹிலவத்தை பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலானது நேற்று முன்தினம் பொலன்னறுவை பகுதியில் ஞானசார தேரர் பேசிய வெறுப்புப் பேச்சின் பின்னணியில் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிராதான அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான், மேல்மாகாண சபை உறுப்பினர்களான எம்.ஜே.எம்.பாயிஸ், அர்ஷாத் நிஷாமுதீன் உள்ளிட்டோர் நேற்று காலை கொஹிலவத்தை பள்ளிவாசலுக்கு பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெ ளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

நேற்று நல்லிரவு 1 மணியளவில் கொஹிலவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகமூடி அணிந்துக்கொண்டு வந்த ஆறு பேரே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். பள்ளிவாசலில் நிறப்பூச்சு அடிக்கும் வேலை செய்துகொண்டிருந்த நபர்கள் இருந்தமையால் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை அனுக முடிந்தது. 

எனினும் குற்றவாளிகள் குறித்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இன்று காலையில் அங்கு நேரில் சென்று விடயம் தொடர்பில் நாம் அவதானம் செலுத்துகிறோம். அத்துடன் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் பொலிஸாரை வேண்டியிருக்கிறேன். 

இதேவேளை, இச்சம்பவம் இனவாதத்தின் பின்னணியில் இடம்பெற்றதொன்றாகும். கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக 2015 ஜனவரி 8 இல் நாம் வாக்களித்தோம். நாம் ஏற்படுத்திய ஆட்சி மாற்றத்தின் ஊடாக இன ஐக்கியத்தை பாதுகாக்கும் வேலைத்திட்டங்கள் பலவேறுமட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், இதனை சீர்குலைக்க பல வகையிலும் சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர், அத்துடன் பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேலோங்கியுள்ளன. இது இவ்வாறிருக்க கடந்த மே தின பேரணியின் போது கூட்டு எதிரணியினரின் கூட்டத்திற்கு திரண்ட சனத்தை வைத்து ஆட்சி மாற்றத்திற்கான வழிகளை தேடுகின்றனர். அதில் பிரதானமான அங்கமாகவே கடந்த சில தினங்களாக மீண்டும் இனவாத செயற்பாடுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, பொலன்னறுவை, இறக்காமம் மாயக்கல்லி, தோப்பூர், பாணந்துறை மற்றும் கொஹிலவத்தை சம்பவங்களை குறிப்பிடலாம். 

அண்மைக்காலமாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கான வெறுப்பு பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். மாயக்கல்லி மலை தொடர்பான அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போது முஸ்லிம்களை கடுமையாக விமர்சித்திருந்தார். அத்துடன், பொலன்னறுவையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அசம்பாவிதத்தின்போது, ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் வித்துள்ளதோடு அல்லாஹ்வையும் நிந்தித்து கருத்து வெ ளியிட்டிருக்கின்றார். இதன் பின்னணியிலேயே கொஹிலவத்தை பள்ளிவாசல் தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. 

இனவாத பிரச்சாரத்தின் விளைவை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அழுத்தங்களை நாம் தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருப்போம். வெறுமனே ஆட்சி அதிகாரங்களை பெற்றுக்கொள்ள முஸ்லிம்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவதை இனவாதிகள் உடனடிகாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த இனவாத அரசியல் நிலைக்காது என்பதை மஹிந்த அரசாங்கத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த கால அனுபவங்கள் மூலம் நாம் பாடங்களை கற்றுக்கொள்ளாவிடின் எமது நாட்டின் நிலை இன்னும் பாதாளத்திற்கே செல்லும் என்பதை இனவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.  நாட்டின் நலனுக்காக இனவாதிகள், அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -