அண்மைக்காலமாக சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பாக சர்வதேச சமுகத்தின் கவனமானது மிகக் கூடுதலாக இருந்த போதிலும் ஒரு நாட்டின் சமூக, பொருளாதார அரசியல் அபிவிருத்தியினை தீர்மானிக்கும் பொறுப்பு இறைமைமிக்க ஓர் அரசுக்குரியதாகும். அரசியல் அமைப்பின் உத்தரவாதத்தின்படி ஒருவர் தமது மொழி உரிமையினை நாட்டில் எத்திசையிலாவது பயன்படுத்த முடியும் என்பதால் மொழி ரீதியான பிரிவினை காட்டி சிறுபான்மையினர் ஓரம்காட்டப்படலாகாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் முகாமைத்துவ சுற்றறிக்கை;கு அமைவாக மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு அவர்களின் தலைமையில் 29.05.2017 இன்று பிரதேச செயலகத்தில் அரசு உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலோடு நடைபெற்ற மொழி உரிமை பற்றிய செயலமர்வில் வளவாளராகக் கலந்து கொண்ட அப்துல் அஸீஸ் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,
இங்கை - இந்திய ஒப்பந்தம் 1988ம் ஆண்டு கைச்சாத்திட்டதன்படி, அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் தமிழ்மொழி உத்தியோக மொழியாக ஆக்கப்பட்டதைத் தொடர்ந்து சிங்களத்துடன் தமிலும், நிர்வாக மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இத்திருத்தத்தின்படி, எந்த நபரும் சிங்களத்தில் அல்லது தமிழில் தொடர்பு கொள்ளவும் பதிலைப் பெறவும் உரிமையளிக்கின்றது.
இலங்கை அரசியல் அமைப்பின் அத்தியாயம் மூன்றில் எல்லா ஆட்களும், பிரஜைகளும் அடிப்படை உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் உரித்துடையவரென்றும், எந்தவொரு ஆளையாவது இனம், சமய, மொழி, பால் மற்றும் அரசியல் கொள்கை காரணமாக ஓரங்காட்டப்படலாகாது எனவும், வேறு எத்தகைய ஒரு காரணத்திற்காகவாவது வியாபார இடங்கள், பொது உணவு விடுதிகள், பொது பொழுது போக்கிடங்கள், தனது சமயத்திற்குரிய பொது வழிபாட்டிடங்களுக்குச் செல்வது தொடர்பான இடையூறு, கட்டு;ப்பாடு, தண்டணை போன்ற நிலைமைகளுக்கு உட்படுத்தக் கூடாது எனவும் யாப்பில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரசியல் அமைப்பு யாப்பின் நான்காம் அத்தியாயத்தில் இலங்கையின் தேசிய மொழிகள் சிங்களமும், தமிழும் ஆதல் வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் மொழிக்கான பாதுகாப்பு சட்டரீதியாக அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருப்பது பெருமைக்குரியது. எந்தவொரு ஆளும் எந்தத் தேசிய மொழியிலும் கல்வி கற்பதற்கு உரிமையுண்டு. இருப்பினும் தேசிய மொழியில்லாத ஒரு மொழியைக் கல்வி மொழியாகக் கொண்டிருக்கின்ற ஓர் உயர் கல்வி நிறுவனத்திற்கு இது ஏற்புடையதாகாது என்பதையும் அரசியல் அமைப்பு சுட்டிக் காட்டியிருப்பதால் ஏனைய மொழிகளுக்கான சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் இலங்கையில் காணக்கூடியதாக இருக்கின்றது.
அரசாங்கத்தினால் ஆக்கப்படுகின்ற சட்டங்கள், சுற்றறிக்கைகள் உள்ளிட்ட படிவங்கள் ஆவணங்கள் இரு தேசிய மொழியிகளிலும் வெளியிடப்படல் வேண்டும். இவ்விடயங்களில் எமது நாட்டில் முன்னேற்றம் போதாமையாகவுள்ளது. சில மொழிபெயர்ப்புக்களில் ஏற்படுகின்ற தவறுகள் காரணமாக சில தகவல்களை விளங்கிக் கொள்ள முடியாத நிலை இருக்கத்தான் செய்கிறது.
சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டரீதியான பொறுப்பு அரசாங்கத்திற்குள்ளது. இலங்கையில் சகல மக்களும் அச்சமின்றி பாதுகாப்பாக வாழவேண்டும், மனித கௌரவம் மதிக்கப்பட வேண்டும். பொதுவாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமங்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும். சகல சமுதாயங்களும் தமது தனித்துவம் பற்றி எடுத்துக் கூறவும், மொழியினை பயன்படுத்தி நாட்டில் சகல விடங்களிலும் பூரண பங்கு கொள்ளவும் இடமளிக்கப்படல் வேண்டும் எனவும் அஸீஸ் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.