எம்.வை.அமீர்-
ஆண்டாண்டுகாலமாக இலங்கையில் ஏனைய சமூகங்களுடன் இணைந்து முஸ்லிம்கள் வாழ்ந்துவரும் இத்தருணத்தில், தீவிரபோக்குக் கொண்ட சில துறவிகளால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விரும்பத்தகாத செயற்பாடுகளைக் கண்டிக்கின்ற அதேவேளை முஸ்லிம்களுக்கு எதிரான அசாதாரண நிலைமைகள் குறித்து பொதுபலசேனவுடனும் பேசவேண்டும் என்று இன நல்லுறவிற்கான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான அஷ்ஷெயக். அப்துல் காதர் மசூர் மௌலானா தெரிவித்தார்.
இறக்காமம் மாயக்கல் பிரதேசத்தில் துறவிகளால் புத்தர் சிலை வைத்ததன் காரணமாக அப்பிரதேசத்தில் ஏற்பாட்டுக்க அசாதாரணநிலை குறித்து ஆராய்வதற்காக இன நல்லுறவிற்கான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான அஷ்ஷெயக். அப்துல் காதர் மசூர் மௌலானா இறக்காமத்துக்கு கடந்த 2017-05-17 ஆம் திகதி இறக்காமம் பிரதேசத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது இறக்காமம் ஜாமிஉத் தைய்யார் ஜும்மா பள்ளிவாசலில், சட்டத்தரணி பாறூக் ஸாஹித் தலைமையில் குறித்த பிரச்சினையை கையாளும் குழுவினருடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போதே அஷ்ஷெயக். மசூர் மௌலானா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நல்லாட்சியைக் கொண்டுவர முஸ்லிம்கள் பாரிய பங்களிப்பைச் செய்திருந்தபோதிலும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறைந்தபாடில்லை என்றும் மாறாக ஆதிகரித்துச் செல்கிறதேதவிர அதற்காக எவ்வித காத்திரமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் இந்நிலை நீடிக்குமாக இருந்தால் பாரிய பின்விளைவுகள் ஏற்படவே வாய்ப்புள்ளதாகவும் இந்நிலைக்கு உடனடியாக தீர்வு ஒன்றை காணவேண்டும் என்றும் இதற்காக தேவைப்படின் பொதுபலசேனாவுடன் பேசவேண்டிய தேவை ஏற்படின் அவர்களுடனும் பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முஸ்லிம் அரசியல் தலைவர்களின் அழுத்தங்கள் போதாமல் உள்ளதாகவும் இன்றைய சூழலில் ஒன்றிணைந்த அழுத்தமே அவசியம் என்றும் குறித்த விடயங்கள் தொடர்பில் பொதுபலசேனவுக்கு விளக்கமளிக்கவேண்டிய தேவையுள்ளதாகவும் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளை அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து விட்டுக்கொடுப்புகளுடன் செயற்பட்டு தீர்வைப்பெற முனையவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
குறித்த சந்திப்பின்போது இறக்காமம் மலைக்குழுவினரால் அஷ்ஷெயக். அப்துல் காதர் மசூர் மௌலானாவிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. நிகழ்வின்போது அரசியல் ஆய்வாளர் கல்முனை முஹம்மட் இப்றாகிம் உள்ளிட்டவர்களும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.



