எம்.ரீ.ஹைதர் அலி-
தொழிலாளர்களின் தியாகம் மற்றும் அவர்களின் உழைப்பின் உன்னதத்தினை கௌரவிக்க வேண்டிய இன்றைய மே தின நிகழ்வுகள் அரசியல் கட்சிகள் தமது பலத்தினை வெளிக்காட்டுகின்ற ஒரு நாளாக மாறியிருப்பது மிகவும் வேதனையளிக்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
மே தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாபெரும் மே தின ஊர்வலம் மற்றும் விஷேட பொதுக்கூட்டம் என்பன இன்று (01.05.2017) மிக விமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...
மேல் வர்க்கத்தினரின் அடக்கு முறைகளுக்கு எதிராக உலகளாவிய தொழிலாளர்கள் ஒன்றிணைந்த ஒரு நாளினை நினைவுகூர்ந்து உலகம் பூராகவும் பல்வேறு நாடுகளில் தொழிலாளிகளின் ஒற்றுமையின் பலத்தினை எடுத்துக்காட்டும் விதமாக மே தின நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றன.
ஆனால் துரதிஸ்டவசமாக எமது நாட்டின் கண்டி, கொழும்பு போன்ற இடங்களில் இன்று நடைபெறும் மே தின நிகழ்வுகள் அரசியல் கட்சிகள் தங்களது மக்கள் பலத்தினை நிரூபிப்பதற்கான ஒரு பலப்பரீட்சையாகவே அமைந்துள்ளது.
எனவே இத்தகைய நிலைமைகள் மாறி மே தின நிகழ்வுகள் என்பது தமது உதிரத்தினை வியர்வையாக சிந்தி உழைக்கக்கூடிய தொழிலாளர்களை கௌரவப்படுத்தி அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுகின்ற ஒரு நிகழ்வாக அமைய வேண்டும்.
இன்று இந்த நாட்டின் சிறுபான்மை மக்களினுடைய உரிமைகள் கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது. கடந்த ஆட்சியின் போது சிறுபான்மை மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக இந்த நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு சிறுபான்மை மக்கள் 99 சதவீதம் பங்களிப்பு செய்திருந்தார்கள் என்பதனை இரண்டு நாட்களுக்கு முன்னர் ஓட்டமாவடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
இருப்பினும் இந்த நல்லாட்சிக்கு பூரண பங்களிப்பு வழங்கிய சிறுபான்மை மக்களினுடைய உரிமைகள் தொடர்ச்சியாக இந்த அரசாங்கத்திலும் பறிக்கப்பட்டு வருகின்றது.
சிறுபான்மை மக்களுக்கு சொந்தமான காணிகளை அபகரிப்பதும், மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளை வனப்பிரதேசங்களாக பிரகடனப்படுத்தி மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்குள் செல்லவிடாமல் தடுக்கின்ற செயற்பாடுகளும் இந்த அரசாங்கத்தில் கனகட்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக சிறுபான்மை சமூகமொன்றினை சட்டரீதியாக அடக்குகின்ற செயற்பாடு வில்பத்துவில் முன்னெடுக்கப்பட்டது. அதே போன்று மாயக்கல்லி மலை என்ற முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசத்தினை தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக பிரகடனப்படுத்தி சிங்கள மக்கள் வாழாத குறித்த பிரதேசத்தில் புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப்பட்டு இனக்கலவரம் ஒன்றினை தோற்றுவிக்கக்கூடிய சம்பவங்கள் இந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.
ஆட்சி மாற்றம் ஒன்றினை கொண்டுவந்து வெறுமென நாட்டினுடைய தலைவர்களை மாற்றுவதினால் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியாது என்பதனை இத்தகைய விடயங்கள் எமக்கு உணர்த்தியிருக்கின்றது.
ஆகவே சிறுபான்மை மக்களாகிய நாங்கள் இந்த நாட்டில் நிரந்தரமாக கௌரவமான முறையில் வாழ வேண்டுமாக இருந்தால் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கான சுயாட்சிகள் உரிய முறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். 13ஆம் திருத்தச் சட்டத்தினூடாக வழங்கப்பட்ட காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு இல்லாதிருப்பதன் காரனமாகவேதான் மத்திய அரசும் தொல்பொருள் ஆராட்சி மையமும் வட, கிழக்கிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு சொந்தமான காணிகளை அத்துமீறி அபகரிக்கின்ற ஒரு நிலை உருவாகியுள்ளது.
எனவே எங்களுடைய சமூகங்கள் ஒற்றுமைப்பட்டு செயற்படுவதன் மூலமாகவே இந்த நாட்டில் எமக்குரிய அதிகாரங்களையும் சுதத்திரத்தினையும் உறுதிப்படுத்திக்கொள்வதோடு எங்களுடைய கோரிக்கைகளையும் சட்ட ரீதியாக வென்றெடுக்க முடியும் என தனது உரையில் தெரிவித்தார்.