எஸ்.அஷ்ரப்கான்-
தம்புள்ள பள்ளியை உடைத்து இடம் மாற்றுவதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது என மீண்டும் சொல்கின்றோம் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
புனிதப்பிரதேசத்துள் பள்ளிவாயல்களோ கோயில்களோ இருக்கக்கூடாது என்பதற்காகவே தம்புள்ள பள்ளியை உடைக்க வேண்டும் என சிங்கள பேரினவாத துடிக்கிறது. இது நடைபெறுமானால் நாளை கண்டி பள்ளிவாயலையும் இடம் மாற்ற சொல்வார்கள் என எச்சரிக்கிறோம்.
தம்புள்ள பள்ளிவாயல் சம்பந்தமாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே கருத்தை முன் வைக்கும்படியும் அக்கருத்து என்பது பள்ளியை எக்காரணம் கொண்டும் இடம் மாற்றக்கூடாது என்றே இருக்க வேண்டும். இதையும் மீறி இனவாத அரசு அப்பள்ளியை அகற்றத்தான் வேண்டும் என்றால் பள்ளியை அவர்களே உடைக்கட்டும். அதன் பின் இதற்கெதிராக மேற்படி பள்ளி நிர்வாகம் நீதிமன்றத்தை நாட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம். முஸ்லிம்கள் தமது பள்ளியை புனிதஸ்தலம் என்ற காரணத்துக்காக இடம் மாற்ற அனுமதிக்க மாட்டார்கள் என்பதை இனி வரப்போகும் இனவாதிகளும் புரிந்து கொள்ளுமளவு இதில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமைப்பட்டு செயலாற்ற வேண்டும்.
பள்ளியை உடைத்தால் இந்த நல்லாட்சியின் காலத்தில்தான் பள்ளி உடைக்கப்பட்டது என்பது ஜனாதிபதி மைத்ரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் வரலாற்று களங்கம் ஏற்படுமென்பதால் உடைக்க முற்படமாட்டார்கள். ஆனால் முஸ்லிம் எம்பீக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து பள்ளியை அவர்கள் அனுமதியுடன் அகற்றவே முயற்சிப்பார்கள். இத்தகைய சமூக துரோகத்துக்கு முஸ்லிம் எம்பீக்கள் துணை போக்ககூடாது.
இன்றைய பாராளுமன்றத்தில் அனைத்து முஸ்லிம் எம்பீக்களும் ஆளும் கட்சியில் இருப்பதால் இது விடயத்தை பாராளுமன்றத்தில் எதிர்த்து பேச முஸ்லிம் எவரும் எதிர்க்கட்சியில் இல்லை என்பது முஸ்லிம் சமூகத்தின் கைசேதமாகும்.
ஆகவே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக நல்லாட்சிக்கு வாக்களித்தது தம்புள்ள பள்ளிவாயலை இடம் மாற்றாமல் அதே இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.