எஸ்.ஹமீத்-
முசலி மக்களின் காணிகளை வில்பத்து விரிவாக்கம் என்ற பெயரில் கபளீகரம் செய்து கொள்ள சிங்கள இனவாதிகள் தீட்டியிருந்த திட்டத்திற்கெதிராகக் கிளர்ந்தெழுந்து அவன் போராடப் புறப்பட்ட போதே ''முசலியில் எவ்விதப் பிரச்சினைகளுமில்லை. வில்பத்து விடயத்தை அமைச்சர் றிசாத் தனது சொந்த நலனுக்காகவே கையில் எடுத்துள்ளார்.'' என்று கூறியவர்களே, இப்பொழுது நீங்கள் எல்லோரும் எங்கிருக்கிறீர்கள்...?
இன்று முசலியின் பல கிராமங்களில் ஒலிக்கும் அந்த அவலக் குரல் உங்கள் காதுகளில் விழவில்லையா...?
இருபத்தேழு வருட அகதி வாழ்வில் நொந்து நூலாகி, வெந்து வேதனையுற்று, விரக்தியின் விளிம்புக்கே சென்றவர்கள் தமது சொந்தக் காணிகளில் ஒரு குடிசையமைத்து வாழக் கூட வகையற்று இன்று தவிக்கின்றனரே, அவர்களது கண்ணீர் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா...?
தமிழீழ விடுதலைப் புலிகளினால் எல்லாமிழந்து, வெறுங்கையுடன் வெளியேறி, எங்கெல்லாமோ இரவல் வாழ்க்கை நடாத்தி, இனியாவது நமது சொந்த பூமியில் வாழ்வோமென்று வந்து, பற்றைகளையும் புற்றுகளையும் அழித்து ஓலைக் கொட்டிலைப் போட்டு உட்கார்ந்தவர்களை நாதியற்ற நிலைக்குள் தள்ளிவிட்ட சிங்கள இனவாதத் துவேஷத்தில், ரிஷாத் தோற்றுவிட்டானென எண்ணி இறும்பூதெய்துகின்ற இதயமற்றவர்களே, உங்கள் இதயங்களில் மனச்சாட்சி என்பது மரித்துப் போய்விட்டதா...?
தன்னந் தனியனாகக் களத்தில் நின்று, ஒட்டுமொத்த சிங்கள இன வக்கிரத்திற்கெதிராக அவன் முசலி மண்ணின் பாவப்பட்ட மக்களுக்காகப் போராடிய போது, அரசியற் பொறாமையினால், அவன் மீது கொண்ட தனிப்பட்ட காழ்ப்புணர்வினால் வில்பத்து விடயத்தை றிசாத் வேண்டுமென்றே பூதாகாரமாக்குகிறார் என்று கூறி, சிங்கள பௌத்த பெரும்பான்மை இனவாதிகளிடம் காட்டிக் கொடுத்த, இல்லாத பழியையெல்லாம் அவன் மீது போட்டுக் கொடுத்த நயவஞ்சகர்களே, உங்கள் கேவலமான நாவுகளையும் கறை படிந்த நெஞ்சங்களையும் இப்போது எங்கு கொண்டு பதுக்கி வைக்கப் போகிறீர்கள்...?
றிசாத்தைப் பழி தீர்க்கிறோமென்ற பெயரில் இன்று முசலியின் பரிதாபத்திற்குரிய மக்களின் வயிற்றில் அக்கினியை அள்ளிக் கொட்டியிருப்பவர்களே, உங்களை அந்த அல்லாஹ் சபிக்க மாட்டானா...?
அற்ப அரசியல் ஆதாயத்துக்காக, அன்றாடம் உண்பதற்கே கஷ்டப்படுகின்ற ஏழை, எளிய மக்களின் வாழ்வைக் கபடத்தனமாகச் சூறையாடிய நரிகளே, உங்கள் அரசியல் விளையாட்டில் தோற்றுப் போனது றிசாத் அல்ல. மாறாக, இன்று நிலமிழந்து நிற்கும் அந்த முசலி மக்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ள மாட்டீர்களா...?
இனியெங்கு போவது...? எப்படி எம் எதிர்காலத்தை அமைத்துக் கொள்வது...? என்ற கேள்விகளினால் துளைத்தெடுக்கப்பட்டு இன்று இரத்தக் கண்ணீர் வடிக்கின்ற முசலியின் ஆயிரக் கணக்கான மக்களின் சாபம் உங்கள் சந்ததிகளையே சூழ்ந்து கொள்ளும்; கழுத்தைச் சுற்றி இறுக்கும்; அந்த இறுக்கத்தில் நீங்களெல்லோரும் நரகத்தின் வேதனையை அனுபவிப்பீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
இப்பொழுது கூட உங்களுக்குச் சந்தர்ப்பமொன்றிருக்கிறது. நாமெல்லோரும் ஒன்றாயிணைந்து கொண்டு வந்து, இன்று நமக்கே குழி பறிக்கும் இந்த அரசாங்கத்தின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கெதிராக, குறிப்பாக வில்பத்து விரிவாக்கமென்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களைக் கருவறுக்கும் இந்த அக்கிரமத்துக்கெதிராக ரிசாதுடன் இணைந்து நீங்களும் குரல் கொடுங்கள். அவ்வாறு ரிசாதுடன் இணைவதற்கு உங்கள் 'ஈகோ' இடம் தரவில்லையானால், தனித் தனியாகவாவது போராடுங்கள். அதன் மூலம் உங்கள் பாவக் கறைகளைச் சிறிதளவாவது கழுவிக் கொள்ள முயலுங்கள்...!
அதைவிடுத்து, முஸ்லீம் சமூகத்தின் பொது எதிரியான மின்னல் ரங்கா போன்றோரின் நயவஞ்சக நாட்டியங்களினது 'கலைஞர்களாக' வேஷமிட்டுக் கூடிக் கும்மியடிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
அல்லாஹ் நம் அனைவரையும் நேரான வழியில் நடாத்துவானாக..