எம்.ரீ. ஹைதர் அலி-
இன்று எமது சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது. டெங்கு போன்ற பாரிய நோய்கள் எமது சமூகத்தை ஆட்கொண்டுள்ளது. இத்தகைய விடயங்களிலிருந்து எமது சமூகத்தை பாதுகாத்துக்கொள்ள வெறுமெனே அரசியல் வாதிகளால் மாத்திரம் முடியாது. மாறாக சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் எங்களால் முடியுமான பங்களிப்புகளை மேற்கொள்ள வேண்டும். எமது இஸ்லாமிய மார்க்கமும் இத்தகைய சமூக பண்புகளையே எங்களிடத்தில் வலியுறுத்துகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலைய மாணவர்களின் பாவனைக்காக துவிச்சக்கர வண்டி ஒன்றினை பெற்றுக்கொடுக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளிக்கமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்பப்டுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து சுமார் 60,000.00 ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் நான்கினை காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு வழங்கிவைக்கும் நிகழ்வு 2017.03.25ஆந்திகதி-சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
மனிதன் என்ற ரீதியில் தன்னுடைய சமூகம் சார்ந்த விடயங்களில் ஒவ்வொருவருக்கும் பொறுப்புக்கள் உள்ளது. நாங்கள் எங்களது சமூகத்திற்காக எதனை செய்துள்ளோம் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
குறிப்பாக இத்தகைய அநாதரவான சிறார்களுடைய விடயத்தில் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டிய தேவைப்பாடு நம் அனைவர் மத்தியிலும் காணப்படுகின்றது. இன்று பெற்றோர்களை இழந்த நிலையில் உள்ள இந்த சிறார்கள் எதிர்காலத்தில் இந்த சமூகத்தில் உயர் நிலைகளை அடையக்கூடிய சிறந்த பிரஜைகளாக மாற வேண்டும்.
அந்த வகையில் இத்தகைய சிறுவர்களை சிறந்த விதத்தில் பராமரித்து கல்வி மற்றும் மார்க்கம் சார்ந்த அனைத்து விடயங்களிற்கும் வழிகாட்டுகின்ற இந்த இல்லத்தினுடைய செயற்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
ஆகவே இவ்வாறான சமூகம் சார்ந்த நிறுவனங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி தொடர்ச்சியாக எங்களுடைய அனைத்து விதமான உதவித்திட்டங்களையும் முன்னெடுப்பதனூடாக இத்தகைய நிறுவனகளின் பணிகளை மேலும் சிறந்த விதத்தில் முன்னெடுப்பதற்கு எப்போதும் துணைநிற்போம் என தனது உரையில் தெரிவித்தார்.