ஐ. ஏ. காதிர் கான்-
தனியார் பஸ் வண்டிகளில் பயணச் சீட்டுகளின்றி பயணிக்கும் பிரயாணிகளிடமிருந்து, தண்டப் பணம் அறவிடுவதற்கான புதிய சட்டம், தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவினால் அமுல்படுத்தப்படவுள்ளது.
இப் புதிய சட்டம் இன்று (15) புதன்கிழமை முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், பிரயாணிகள் தமது பயணம் முடியும் வரை, உரிய பற்றுச் சீட்டுக்களை, தம்வசம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளிடம் வேண்டியுள்ளது. இதன்பிரகாரம், பயணச் சீட்டுக்கள் இன்றி பயணிக்கும் பிரயாணிகளிடமிருந்து தண்டப் பணமாக 100 ரூபாவும், பயணப் பெறுமதியின் இரு மடங்குத் தொகையும் அறவிடப்படும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பிரயாணிகளுக்கு பயணச் சீட்டுக்களை வழங்காமல் இருக்கும் தனியார் பஸ் நடத்துனர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பயணி ஒருவருக்கு டிக்கட் வழங்கப்படாமல் இருந்தால், முதலாவது குற்றத்திற்காக 250 ரூபாவும், இரண்டாவது குற்றத்திற்காக 500 ரூபாவும், மூன்றாவது குற்றத்திற்காக ஆயிரம் ரூபாவும் அறவிடப்படவுள்ளதோடு, நான்காவது விடுத்தமும் தவறிழைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், பஸ் நடத்துனரின் அனுமதிப் பத்திரம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்படும் என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதுபோன்ற சட்டங்கள், கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்டபோதும், அவைகள் கடுமையாக்கப்படாததின் காரணமாக, மிகவும் மந்த கெதியிலேயே பணிகள் இடம்பெற்றன. எனினும், இம்முறை இந்தச் சட்டங்கள் மிகவும் கடுமையான முறையில் திட்டவட்டமாக அமுல்படுத்தப்படும் என்றும் போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளையும், பஸ் நடத்துனர்களையும் அறிவுறுத்தியுள்ளது.