கிழக்கின் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் உட்பட ஏனைய வெற்றிடங்கள் அடங்கிய சகல ஆவணங்களும் திறைசேரி மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதன் போது இதில் கிழக்கு மாகாணத்தில் உள்ள 37 கல்வி வலயங்களுக்குமான வெற்றிடங்களை உள்ளடக்கி அவற்றின் தரவுகளை தொகுத்து ஆவணமாக இவை நேற்று பிற்பகல் திறைசேரியில் கையளிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டீ ஏ நிசாம் தெரிவித்தார்,
அத்துடன் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாக ஆயிரம் பக்கங்களை உள்ளடக்கிய மூன்று புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டதுடன் அவற்றில் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டியதன் அவசியமும் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது,
கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் அதிகாரிகள் கடும் முயற்சிகளை முன்னெடுத்து ஒன்றரை கிழமைக்குள் 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை உடைய ஆவணங்களை தொகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது,
குறித்த ஆவணங்களை திறைசேரியிடம் கையளிக்கப்பட முன்னர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவற்றை ஆராய்ந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதற்கு முன்னர் கடந்த 14 ஆம் திகதி கிழக்கு முதலமைச்சரின் பங்கேற்புடன் திறைசேரியில் இடம்பெற்ற கூட்டத்தில் கிழக்கின் சகல தரவுகள் அடங்கிய ஆவணங்களை இரண்டு கிழமைக்குள் திறைசேரி மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் கையளிக்குமாறு பிரதமரின் ஆலோசகர் ஆர் பாஸ்கரலிங்கம் பணிப்புரை விடுத்திருந்த நிலையில் ஒன்றரை கிழமைக்குள் இந்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன,
கிழக்கு முதலமைச்சர் மீது பட்டதாரிகள் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் பட்டதாரிகள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,