கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் ஏற்பாட்டில் கிண்ணியாவில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பஞ தொடர்பான கலந்துரையாடலில் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பங்கேற்றனர், இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தில் கிண்ணியா நகர சபை உட்பட உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்நோக்கும்பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டன,’
இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் அமீர் அலி,பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப்,முன்னாள் கிண்ணியா நகரபிதா ஹில்மி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
கிண்ணியா வைத்தியசாலையை மத்தியரசுக்கு மாற்றுவதன் ஊடாக மாத்திரம் வைத்தியசாலையில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடாது எனவும் மாகாண சபைகளுக்கு போதிய நிதியை வழங்கினாலே மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்திக்க கூடியதாக இருக்கும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதன் போது சுட்டிக்காட்டினார்.
அவ்வாறாயின் நாளை இன்னொரு பிரதேச வைத்தியசாலைக்கு இவ்வாறான நிலை தோன்றும் போது அதனை மத்தியரசுக்கு மாற்றுவது போன்றவை உரிய தீர்வாக அமையாது எனவும் அது தலைவலிக்கு தலையணையை மாற்றிய கதையாகவே அமையும் எனவும் கிழக்கு முதலமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்திலே 226 வைத்தியசாலைகள் உள்ளதுடன் இதில் 12 தள வைத்தியசாலைகளும் 46 பிராந்திய வைத்தியசாலைகளும் 60 ஆரம்ப்ப்பிரிவு வைத்தியசாலைகளும் மூன்று ஆயுர்வேத தள வைத்தியசாலைகளும் 5 மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைகளும் மூன்று பஞ்ச கர்ம வைத்தியசாலைகளும் மூன்று கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைகளும் மற்றும் 44 மத்திய ஆயுர்வேத மருந்தகங்களும் உள்ளன.
இவற்றுக்கெல்லாம் 265 மில்லியன் ரூபாவே 2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினூடாகவழங்கப்பட்டுள்ளது. அப்படியானால் ஒரு வைத்தியசாலைகளுக்கு 1 மில்லியனுக்கும் குறைவான நிதி அதாவது 10 இலட்சத்துக்கும் குறைவாகவே ஒதுக்கப்படுகின்றது ,ஆனால் இன்று வைத்தியசாலைகளுக்கு தேவையான உபகரணங்களே 20 இலட்சம் 30 இலட்ச ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையவை .
எனவே மாகாண வைத்தியசாலைகளுக்கான நிதியை வழங்குவதன் ஊடாக மாத்திரமே அவற்றை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் இந்த வருடத்திற்கான நிதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அதனை வழங்க அரசாங்கத்துக்கு ஆவண செய்ய வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கு மாகாண சபைக்கு வர வேண்டுமெனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அழைப்பு விடுத்தார்.