கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் (unfpa) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரதிநிதி ரிட்ஸு நெக்கன் (ritsu nacken) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது, திருகோணமலையில் உள்ள கிழக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபானி மற்றும் முதலமைச்சரின் செயலாளர் யூ.ஏ.எல்.அசீஸ் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த மார்ச் 20 ஆம் திகதி இலங்கைக்கான பிரதிநிதியாக ரிட்ஸு நெக்கன் பதவியேற்றதன் பின்னர் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளுடன் முன்னெடுக்கப்படும் முதல் சந்திப்பு இதுவாகும்.
இதன் போது கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர், போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும்,மக்களின் சொந்தக் காணிகள் பல படையினர் மற்றும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் பல காணிகளை தொல்பொருள் முக்கியத்துவம் போன்ற போர்வையில் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன் போது ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியிடம் எடுத்துரைக்கப்பட்டன,
அது மாத்திரமன்றி கிழக்கில் தலைவரித்தாடும் வறுமை மற்றும் வேலையில்லாப்பிரச்சினையினால் மாகாணத்தில் பொதுவான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுக்கப்பட்டாலும் தனிமனித வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.
ஏனைய மாகாணங்களில் தனியார் தொழிற்துறைகள் மற்றும் புதிய தொழிற்துறைகள் உருவாகின்ற போதும் கிழக்கில் அவ்வாறான எவ்வித வாய்ப்புக்களோ தொழிற்துறைகளோ இன்மையால் பெரும்பாலான இளைஞர் யுவதிகள் இன்று தொழில்வாய்ப்பின்றி பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் இன்று படித்து பட்டம் பெற்ற இளைஞர் யுவதிகள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடாத்த வேண்டிய நிலைமைக்கு உள்ளாகியுள்ளதுடன் கிழக்கில் புதிய தொழிற்துறைகள் உருவாகாமையின் மூலமே இவ்வாறான நிலைமை தோன்றியுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.
கிழக்கில் மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப புதிய தொழிற்துறைகளை உருவாக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தமது முழு உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் தமக்கு வழங்க வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.
கிழக்கில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கவும் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும் தேவையான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க தயார் எனவும் அதற்கான பேச்சுவார்த்தைகளை எதிர்காலத்தில் கிழக்கு மாகாண சபையுடன் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் பிரதிநிதி ரிட்ஸு நக்கென் தெரிவித்தார்.