கண்டி சென்று ஏமாந்த கூட்டம் வன்னி செல்வதா?

எம்.ஜே.எம்.சஜீத்-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்று அக்கட்சியிலிருந்து சற்று ஒதுங்கிக் கொண்டு கட்சியையும், தலைமைத்துவத்தையும் தூய்மைப்படுத்தப் போகின்றோம் எனும் தொனியில் தீவிரமாக பலர் களமிறங்கியுள்ளனர்.

இதில் அக்கட்சியினுடைய முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலி, முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் கட்சியினுடைய உயர்பீட உறுப்பினர்களான அட்டாளச்சேனை பிரதேச சபையினுடைய முன்னாள் தவிசாளர் எம்.ஏ அன்சீல், நிந்தவூர் பிரதேச சபையினுடைய முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் என பலரை குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

மேற்குறிப்பிடப்பட்ட ஹசன் அலி தலைமையிலான குழுவினர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுடன் இணைய வேண்டும் அல்லது அமைச்சர் ரிஷாட்டுடன் இணைய வேண்டும், தனிக்கட்சி பதிவு செய்ய வேண்டும். மற்றும் கிழக்கிலுள்ள அரசியல் தலைவர்களுடன் ஒன்றினைந்து கூட்டணியாக செயற்பட வேண்டும் என பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்து செயற்படுவது குறித்து அம்பாரை மாவட்ட மக்கள் ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக இன்று கண்டி தலைமையைிடம் இருந்து கட்சியையும், மக்களையும் மீட்பதற்கு பல சவால்களை எதிர்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் மு.கா விடமிருந்து மக்களை மீட்டெடுத்து வன்னித்தலைமைக்கு தாரைவார்ப்பதற்கும், மு.கா வின் தூய்மைக்குழு ஒருபோதும் துணைபோகாது என்பது அம்பாரை மாவட்ட மக்களின் பெரும் நம்பிக்கையாகும்.

கண்டி தலைமையின் சிறைக்கூடங்களிலிருந்து விடுதலை பெற்று தாயகம் திரும்பும் கிழக்கு மக்கள் மீண்டும் வன்னி தலைமையின் சிறைக் கூடங்களில் சிக்கிவிடக் கூடாது என்பது கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பாகும். இருந்தாலும் ஹசன் அலி தலைமையிலான குழுவினரை வன்னி தலைமையிடம் சரனடைய வைப்பதற்கு சில குழுக்கள் முயற்சிக்கின்றன. இந்த விடயத்தில் அரசியலில் முதிர்ச்சியும் அனுபவமும் கொண்ட ஹசன் அலி சற்று சிந்தித்து செயற்பட வேண்டிய தேவை உருவாகியுள்ளது. ரவூப் ஹக்கிமுடன் ஏற்பட்டுள்ள முரண்பாட்டினை வைத்துக்கொண்டு ஆத்திரங்களையும் கோபங்களையும் தீர்த்துக்கொள்வதற்காக ரிஷாட்டினுடைய கட்சியில் இணைவது ஒரு நிரந்தர தீர்வாக முடியாது.

குறிப்பாக கண்டித் தலைமை மற்றும், வன்னி தலைமை என்பற்றின் செயற்பாடுகள் மாறுபட்டவையல்ல அத்தலைமைகள் இரண்டும் ஒரு அஜந்தாவிலே பயணிக்கிறது இதனை கிழக்கு மக்கள் அறியாமலுமில்லை அம்பாரை மாவட்ட மக்களிடத்திலே இத்தலைமைகள் பகிரங்கமாகவே பல வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றியிருக்கிறது.

வன்னித் தலைமையின்… வாக்குறுதிகள்…
அம்பாரைக்கு தேசியப் பட்டியல் வழங்குவேன்.
கரையோர மாவட்டம் அறிவிக்காப்படா விட்டால் அமைச்சுப் பதவியினை பொறுப்பேற்கமாட்டேன்.
ஒலுவில் கடலரிப்பை தடுப்பேன்.
அம்பாரை மாவவட்த்திலுள்ள 3தொகுதிகளில் தனது காரியாலயங்களை நிறுவுவேன்.
சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை பெற்றுக்கொடுப்பேன்… என இன்னும் பல வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன.

கண்டித் தலைமையின்… வாக்குறுதிகள்…

அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியல் வழங்குவேன்.
கரையோர மாவட்டம் கோருவேன்
ஒலுவில் கடலரிப்பை தடுப்பேன்.
சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை பெற்றுக்கொடுப்பேன்… என இன்னும் பல வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன.

இறுதியில் இரண்டு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகளும் ஒரே அஜந்தாவிலே ஒரே கொள்கையிலே பயணிக்கின்றன என்பது வெளிப்படையான உண்மையாகும். ஆகவே வன்னித் தமையுடன் பேசுவதைவிட கண்டித் தலைமையுடன் இணைந்திருப்பது மேல் என்கின்றார் மூத்த அரசியல்வாதி ஒருவர்.

கடந்த பொதுத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு கிடைத்த சுமார் 33000 வாக்குகளும் அக்கட்சியின் நிரந்தரமான வாக்குகளல்ல அது மு.கா வுக்கு எதிரான வாக்குகள் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்தவர்களில் 75 வீதமானோர் இன்று அக்கட்சியினுடன் அதிருப்தியுற்று இருப்பதனை அவதானிக்க முடிகிறது. அமைச்சர் ரிஷாட்டினால் அம்பாரை மாவட்டத்தில் அரசியல் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் நிகழக்கூடும் என பலரும் எதிர்பார்த்தும் இறுதியில் ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை.

அகில இலங்கை மக்கள் காங்கிரசிக்கு ஆதரவளித்தவர்கள் அதிருப்தியுற்றுள்ள நிலையில் மு.கா வில் இருந்து விலகிச் சென்று அக்கட்சியினை தூய்மைப்படுத்தும் குழுவினர் அமைச்சர் ரிஷாட்டோடு பேசுவது ஆரோக்கியமான நடவடிக்கையல்ல என பலராலும் பேசப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் ஹசன் அலி தலைமையிலான குழுவினர் தனித்து செயற்பட வேண்டும் அல்லது கிழக்கு அரசியல் தலைமைகளுடன் கைகோர்க்க வேண்டும் இல்லையேல் பிழையான முடிவுகளை மேற்கொள்வதன் ஊடாக இன்னுமொரு தலைமையினை தூய்மைப்படுத்த வேண்டியேற்படும் என்பது உண்மையாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -