ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயம் போரதீவுப்பற்றுக் கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயம் திங்கட்கிழமை (27.02.2017) இரவு காட்டு யானை சேதமாக்கப்பட்டுள்ளதாக அந்தப் பாடசாலையின் அதிபர் வி. யோகேஸ்வரன் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை வழமைபோன்று பாடசாலைக்குச் சென்றபோது பாடசாலையின் கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாகவும் பாடசாலையின் சுற்று வேலியின் ஒருபகுதி மற்றும் தென்னை, வாழை போன்ற மரங்களையும் காட்டு யானைகள் துவம்சம் செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இது பற்றி பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் மற்றும் போரதீவுப்பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பி. பாலச்சந்தின் ஆகியோருக்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
தும்பங்கேணிக் கிராமத்தில் அதிகாலை ஒரு மளியளவில் புகுந்த தனியன் காட்டு யானை ஒன்றினால் மக்கள் பெரும் அல்லோல கல்லோலப்பட்டுள்ளனர். காட்டு யானையை விரட்ட முற்பட்ட வேளையில் அது முடியாமல் போனதனால் கிராம மக்கள், இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தீப்பந்தம் ஏந்தி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையை ஒருவாறு விரட்டியுள்ளனர்.
கடந்த வருடம் தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தில் மாலை நேர வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரும் காட்டுயானை தாக்குதலுக்கிலக்காகி பாடுகாயமடைந்திருந்தார். கடந்த வாரம் இப்பிரதேசத்திற்குட்பட்ட 35ஆம் கிராமத்தின் கண்ணன் வித்தியாலயத்தையும், காட்டுயானை சேதப்படுத்தியிருந்தது குறிப்பிடத் தக்கது.



