மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் அமைச்சில் இருந்து வெளியேற முடியாதபடி விரைவில் அமைச்சை முற்றுகையிடப் போவதாக உள்ளூராட்சி சபைகள் ஒன்றியத்தின் தலைவர் உதேனி அத்துகோரள தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மார்ச் 18 ஆம் திகதி 53 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கைகளை ஆரம்பித்து மக்களுக்கான உண்மையான ஜனநாயகத்தை வெளிகாட்ட உள்ளோம். அத்துடன் நின்று விடாமல் உள்ளூராட்சி சபைகள் அமைச்சுக்கு எதிரில் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு எல்லை நிர்ணய அறிக்கையை மாத்திரம் வர்த்தமானியில் வெளியிடுவது போதுமானதல்ல. மேலும் சில வர்த்தமானிகள் வெளியிடப்பட வேண்டும். மேலும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட வேண்டும் எனவும் உதேனி அத்துகோரள தெரிவித்துள்ளார்.