சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, “புங்குடுதீவு, ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலய புனரமைப்பு



புங்குடுதீவு ஊரதீவுப் பகுதியிலுள்ள “திருநாவுக்கரசு வித்தியாசாலை” யானது மிகவும் இடிந்து மிகவும் பாழடைந்த நிலையில் இருப்பது தொடர்பாக ஊரதீவு மக்களினால் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திடம்” தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்களைத் தொடர்ந்து, சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) அவர்கள், வடமாகாணசபை உறுப்பினர் திரு. விந்தன் கனகரத்தினம் அவர்களுடன் நேரடியாக பல தடவைகள் தொடர்பு கொண்டு, “புங்குடுதீவின் ஊரதீவு பகுதியில் அமைந்துள்ள மேற்படி திருநாவுக்கரசு முன்பள்ளியின் நிலைமைகள் தொடர்பிலும், அப்பகுதியிலுள்ள அதாவது கேரதீவு மற்றும் ஊரதீவு பகுதியிலுள்ள சிறுவர்கள் மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் நீண்டதூரம், நடந்து சென்று மடத்துவெளி கமலாம்பிகை பாடசாலையில் கல்விகற்று வருவதனால் அவர்கள் சோர்வடைந்து படிப்பில் அதீத கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருப்பது உள்ளிட்ட பல விடயங்களையும் சுட்டிக்காட்டி” உரையாடியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இது குறித்து வடமாகாணசபை உறுப்பினர் திரு. விந்தன் கனகரத்தினம் அவர்கள், “வடமாகாண கல்வியமைச்சின் ஊடாக உடனடியாக இது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், மிகவிரைவில் மேற்படி பாடசாலையை திருத்தியமைத்து அதனை இயங்க வைப்பதற்கு தன்னாலான முழு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும்” சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) அவர்களிடம், செப்டம்பர் மாத இறுதியில் உறுதியளிக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.

இதன் பயனாக இன்றையதினம் (06.01.2017), வடமாகாண சபையின் கல்வியமைச்சின் கூட்ட மகாநாட்டு மண்டபத்தில் நடந்த, வடமாகாண கல்வியமைச்சின் ஆலோசனை குழுக் கூட்டத்தில் “புங்குடுதீவு, ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலய புனரமைப்பானது” வடமாகாண சபையின் கல்வியமைச்சின், 2017ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் செய்து முடிப்பதென தீர்மானிக்கப்பட்டு அதற்கென நான்கு மில்லியன் ரூபா 4,000,000 (நாற்பது லட்சம் ரூபாய்) ஒதுக்கீடு செய்து கல்வியமைச்சினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


மேற்படி தீர்மானம் நிறைவேற்றுவதற்காக சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் வேண்டுகோளை ஏற்று, பலமுறை அழுத்தங்களைக் கொடுத்து வந்த வட மாகாணசபை உறுப்பினர் திரு. கே.என்.விந்தன் கனகரட்ணம் அவர்களுக்கு சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் சார்பிலும், உலகெங்கிலும் வாழும் புங்குடுதீவு மக்களின் சார்பிலும் எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

மேற்படி புங்குடுதீவு ஊரதீவு பகுதியிலுள்ள திருநாவுக்கரசு வித்தியாசாலையானது 2017ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்டு, சகல வசதிகளுடனும் ஆரம்பப் பாடசாலையாக (அதாவது முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயிலக்கூடிய பாடசாலையாக) புனரமைத்து தரப்படுமென்று உறுதிமொழி தரப்பட்டுள்ளது.

இதற்காக முழுமூச்சாக நின்று உழைத்த வடமாகாண சபை உறுப்பினர் திரு.விந்தன் கனகரத்தினம் அவர்களுக்கும், வடமாகாண சபை கல்வியமைச்சர் திரு.தம்பிராசா குருகுலராஜா அவர்களுக்கும் மற்றும் வட மாகாணசபை கல்வியமைச்சின் அதிகாரிகள் அனைவருக்கும் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம் சார்பில் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

இதேபோன்று புங்குடுதீவின் வரலாற்று சிறப்புமிக்க பெருக்குமர சுற்றுலாத் தலத்திற்கான வீதியைப் புனரமைப்பது தொடர்பாக, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) அவர்கள் வட மாகாணசபை உறுப்பினர் திரு. விந்தன் கனகரத்தினம் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்து அது தொடர்பில் உரையாடியுள்ளார். இந்த வேண்டுகோளும் மிக விரைவில் நிறைவேற்றித் தரப்படுமென உறுதிமொழி தரப்பட்டுள்ளது. இந்த வகையில் எல்லோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

திரு.செல்லத்துரை சதானந்தன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,
சுவிஸ்லாந்து.
06.01.2017
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -