ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பதுரிய்யா பள்ளிவாயல் வீதியில் வசிக்கும் கடந்த ஆண்டு உயர்தர பரீட்சையில் தொழில் நுட்ப பிரிவில் மூன்று பாடங்கள் சித்தியடைந்திருக்கும் பெளசுல் அமீன் மொஹம்மட் றிபாஸ் எனும் இளைஞனிடம் ஆயுர்வேத வைத்தியசாலையில் கிழக்கு முதலமைச்சர் அல்-ஹாபிழ் நசீர் அஹமட்டினதும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீரினதும் சிபார்சிற்கு அமைய ஊழியனாக பணி புரிய வேலை வாய்ப்பு பெற்று தருவதாக ஒரு வருடத்திற்கு முன்னர் ஓட்டமாவடி மீராவோடையில் வசிக்கும் முதலமைச்சரின் தீவிர செயற்பாட்டாளரான பாயிதா எனும் பெண்மணியிடம் மூன்று இலட்சம் ரூபாய்கள் கொடுக்கப்பட்டும் இன்னும் தனக்கு குறித்த வேலை வாய்ப்போ அல்லது தான் கொடுத்த மூன்று இலட்சம் ரூபாய் ரொக்கப் பணமோ கிடைக்க வில்லை என பாதிக்கப்பட்ட நபர் றிபாஸ் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தனக்கு நியாயம் வேண்டி முறைப்பாடு செய்துள்ளதுடன் ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும் குறித்தவிடயம் சம்பந்தமாக அறியக்கிடைப்பதானது.. பாதிக்கப்பட்ட நபரான றிபாசினுடைய சொந்தமான மனாஸ் எனும் நபரின் மூலம் அறிமுகமான முதலமைச்சரின் தீவிர ஆதரவாளரான மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் மீராவோடை பாயிதா எனும் பெண்மணி றிபாசிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். அதன் அடிப்படையில் கிழக்கு முதலமைச்சருக்கு இரண்டு இலட்சம் ரூபாய்களும், சுகாதார அமைச்சருக்கும் ஒரு இலட்சம் ரூபாய்களும் கொடுத்து தனக்கு ஆயுர்வேத வைத்தியசாலையில் ஊழியனாக வேலை வாய்ப்பு பெற்று தருவதாக மொத்தமாக மூன்று இலட்சம் ரூபாய்கள் பாயிதா எனும் பெண்மணி பெற்றுக்கொண்டதாக வாழைச்சேனை பொலீசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது சம்பந்தமான உண்மை தகவலினை அறிந்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருக்கும் முதலமைச்சரை தொடர்புகொண்டும் இணைப்பு கிடைக்காததினால் சுகாதார அமைச்சர் நசீர், முதலமைச்சரின் ஊடக செயலாளர் முனாஸ், முதலமைச்சரின் மூத்த சகோதரர் ஹிதாயத்துல்லாஹ், முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கேபிஎஸ்.ஹமீட் ஆகியோர்களை தொடர்பு கொண்டு வினவிய பொழுது முதலமைச்சரோ அல்லது சுகாதார அமைச்சரோ இவ்வாறு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை என ஆணித்தரமக தெரிவித்தனர். அத்தோடு பாதிகப்பட்ட நபர் பொலீசிலும், குற்றப்புலானய்வு பிரிவிலும் முறைப்பாடு செய்து தனக்கு நிகழ்ந்துள்ள அநீதிக்கு எதிராக நியாத்தினை பெற்றுக்கொள்வதற்கு தங்களாலான ஒத்துளைப்புக்களை செய்யவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஆகவே பாதிக்கப்பட்ட நபரான மொஹம்மட் றிபாசினுடைய கருத்துக்களுடன் சேர்ந்த பொலீஸ் முறைப்பாட்டுடன் சுகாதார அமைச்சர் நசீர், முதலமைச்சரின் ஊடக செயலாளர் முனாஸ், முதலமைச்சரின் மூத்த சகோதரர் ஹிதாயத்துல்லாஹ், முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கேபிஎஸ்.ஹமீட் ஆகியோர்களிடம் குறித்த சம்பவம் சம்பந்தமாக விரிவாக வினவப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் வழங்கிய பதில்களின் காணொளி இங்கே எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.