கிழக்கிலிருந்து போதையை முற்றாக ஒழிக்கும் ஆண்டாக 2017ஆம் ஆண்டு அமையும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். அதன் முதற்கட்டமாக போதைக்கு எதிரான மாபெரும் பேரணி எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு குறித்து வௌியாகும் கருத்துக்கள் குறித்து வினவிய போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைக் கூறினார், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மதுபான பாவனை அதிகரித்திருப்பதுடன் சில பகுதிகளில் ஹெரோயின் உள்ளிட்ட சில போன்ற போதைப்பொருட்களின் பாவனையும் அதிகரித்து வருகின்றது என்பதை நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும். இதற்கு சில பாடசாலை மாணவர்களும் இலக்கு வைக்கப்படுகின்றமை வேதனை தருவதுடன் இதனூடாக கிழக்கு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குட்படுத்தப்படுவதுடன் அவை முளையிலேயே கிள்ளி எறியப்படாவிட்டால் பாரிய அபாயகரமான நிலை உருவாகும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கிழக்கில் அண்மைக்காலமாக இடம்பெறும் கொலை,கொள்ளை மற்றும் கற்பழிப்பு சம்பவங்களை ஆராயுமிடத்து அதன் பின்னணியில் போதைவஸ்துவப் பாவனை முக்கிய உந்துதலாக இருப்பதை அவதானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
எனவே எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி தலைமையில் ஏறாவூரில் இருந்து முன்னெடுக்கப்படவுள்ள போதைப் பொருளுக்கு எதிரான மாபெரும் பேரணியில் கிழக்கின் சுபீட்சத்தை கனவு கண்டுள்ள அனைவரும் கைகோர்க்க வேண்டும் என முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் பாவனையாளர்கள் குறித்த தகவல்களை மக்கள் உடனடியாக வழங்குவதற்கு போதைப்பொருளுக்கு எதிரான செயலணியொன்று அன்று ஜனாதிபதியினால் கிழக்கில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளதுடன் அதன் ஊடாக தகவல் வழங்குபவர்களின் இரகசியத் தன்மையும் பாதுகாக்கப்படும் என கிழக்கு முதலமைச்சர் உறுதியளித்தார்.
அதன் பின்னர் கிழக்கு முழுவதும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் குறித்த செயற்பாடுகளில் போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள பகுதிகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் தெரிவித்தார்.
