அகமட் எஸ். முகைடீன்-
கல்முனை பிரதேசத்தில் அதிகரித்துக் காணப்படும் டெங்கு நுளம்புத் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கல்முனை பிரதேச வீடுகளில் தேங்கியிருக்கும் திண்மக் கழிவுகளை அகற்றும் நடவடிக்கையினை கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கல்முனை மாநகர சபையுடன் இணைந்து இன்று (9) வெள்ளிக்கிழமை கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் அருகாமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல். றயீஸ், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே. லியாகத் அலி, பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.சி.எம். ஜெரீன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் சகோதரரும், தொழிலதிபருமான எச்.எம்.எம் அமீர் அலி, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.எம். றினோஸ் மற்றும் மாநகர சபை அதிகாரிகள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக பிரதி அமைச்சரின் சகோதரர் எச்.எம்.எம் அமீர் அலியின் அனுசரணையில் நடைபெற்ற மேற்படி வேலைத்திட்டத்தின் மூலம் கல்முனை பிரதேசத்தில் உள்ள சகல வீதிகளிலும் ஒரே நேரத்தில் சேகரிக்கப்பட்ட திண்மக் கழிவுகள் கடற்கரைப் பள்ளிவாசல் அருகாமையில் ஒன்று சேர்க்கப்பட்டு டம்ரெக் கனரக வாகனத்தின் மூலம் பள்ளக்காடு பிரதேசத்திற்கு அனுப்பி வைக்ககப்பட்டது.
ஒவ்வொரு திண்மக் கழிவகற்றும் வாகனங்களும் பள்ளக்காடு பிரதேசத்திற்கு சென்றுவர எடுக்கும் நேர வீண் விரையத்தை இல்லாமல் செய்து திண்மக் கழிவகற்றும் செயல்பாட்டை துரிதப்படுத்தும் வகையில் கல்முனை மாநகர சபையின் வாகனங்களுக்கு மேலதிகமாக தேவைப்பட்ட கனரக வாகனங்கள் பிரதி அமைச்சரின் சகோதரர் எச்.எம்.எம் அமீர் அலியின் சொந்த நிதியிலிருந்து வாடகைக்கு பெறப்பட்டு மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கல்முனை பிரதேசத்தில் தேங்கி இருக்கும் திண்மக் கழிவுகள் அனைத்தும் அகற்றப்படும் வரையில் குறித்த செயற்திட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
