தமிழக வரலாற்றில் நீண்டதொரு இடைவெளியை ஏற்படுத்தியுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கிடையேயும் குறிப்பாக மலையக மக்களிடையேயூம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியூள்ளதாக இ.தொ.கா பொதுச் செயலாளரும், நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் விடுத்துள்ள தமது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமனின் மறைவு குறித்து அவர் அனுப்பி வைத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மறைந்த முதல்வர் எம்.ஜி.இராமசந்திரன் எந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்தாரோ அந்த வகையில் அவர் வழிவந்த புரட்சித் தலைவி ஜெயலலிதாவும் ஏழை மக்களின் இதயங்களில் குடியிருந்தார். இவரின் மறைவு இலங்கையில் எந்தெந்தப் பகுதிகளில் இந்திய வம்சாவளி மக்கள் வாழ்கின்றார்களோ அந்தப் பகுதி மக்கள் அனைவரும் இந்த துயரமான செய்தியை கேட்டு அதிர்ச்சியும், கவலையுமடைந்துள்ளார்கள். முதல்வர் பதவியில் இருந்த காலத்தில் இந்தியா மீனவர் விவகாரமாகவும் இலங்கை வாழ் தமிழர் சார்பாக அவ்வப்போது குரல் எழுப்பி அந்த மக்கள் மனதில் நிறைந்திருந்தார்.
கடந்த காலங்களில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பாக பல்வேறு திட்டங்களை முதல்வரிடம் முன் வைத்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அதற்கு சாதகமான பதிலை தந்து மலையக மக்களின் உதவிக்கான கல்வி, சமூகப் பொருளாதார உதவிகளையும் பெற்றுத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும். தமிழக பொது நிகழ்வுகளிலும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பல தடவைகள் முதல்வர் வழங்கி இருந்தார்.
இ.தொ.காவுடனும், அமரர் தொண்டமானுடனும் வைத்திருந்த நட்பு தற்பொழுது நீண்ட இடைவெளியை ஏற்படுத்தி இருப்பது இ.தொ.காவிற்கு மிகுந்த மனவேதனையைத் தந்திருக்கின்றது. எவ்வாறாயினும் தாயாரை இழந்து நிற்கும் பிள்ளைகள் என்ற வகையில் நாம் அன்னாரது மறைவுக்கு எமது பேரஞ்சலியை செலுத்துகிறோம். ஜெயலலிதாவைப் போன்று ஒரு புரட்சித் தலைவியை வரலாறு நமக்கு இனி ஒரு போதும் தந்து விடாது என ஆறுமுகன் தொண்டமான் தமது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
