அபு அலா, சப்னி அஹமட்-
அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் போன்ற பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இவ்வாறு காணப்படுகின்ற வெற்றிடங்களை நிவர்த்தி செய்து தருமாறு கல்வி அமைச்சரிடமும், மாகாணப் பணிப்பாளரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், அம்மாணவர்களுக்கு கற்பித்த கொடுத்த ஆசிரியர்களையும், அதிபரையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம்.றஸ்மி தலைமையில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு அமைச்சர் உரையாற்றினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளது. இந்த ஆசிரியர் வெற்றிடங்களை எவ்வாறு நிவர்த்தி செய்யலாமென்று கல்வி அமைச்சரும், கல்வி அமைச்சும் தான் இதற்கான ஒரு முடிவினை எடுக்கவேண்டும்.
எமது நாட்டிலுள்ள பல இளைஞர்கள் பட்டங்களை மட்டும் பெற்றவர்களாக காணப்படுகின்றனர். இவ்வாறு பட்டங்கள் பெற்ற இளைஞர்களுக்குள் மிக அதிகமானோர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாகும். இவர்களை ஆசிரியர் சேவையில் இணைக்க வேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது.
அதனை நிவர்த்தி செய்வதற்காக கிழக்கு மாகாண சபையும் அமைச்சரவை வாரியமும் அதற்கான முன்னெடுப்புக்களை மிக துள்ளியமான முறையில் செய்து வருகின்றது. பல்கலைக்கழகம் முடித்த இளைஞர்கள் இன்று தொழில் ஒன்றில்லாமல் படும் அவஸ்தைகளை பார்க்கும்போது மிக கஷ்டமாகவுள்ளது. இவர்களின் தொழில் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வினை வழங்கி வைக்க இந்த நல்லாட்சி அரசு முன்வரவேண்டும்.
அது மாத்திரமல்லாமல், கிழக்கு மாகாண ஆளுநருக்கு பல அழுத்தங்களை கிழக்கு மாகாண சபையின் மூலம் கொடுத்துவருகின்றோம் என்றார்.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், எதிர்கட்சி தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை கௌரவ அதிதியாகவும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசிம் சிறப்பு அதிதியாகவும், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி விஷேட அதிதியாகவும் கலந்துகொண்டனர்.