ஐ.ஏ.காதிர் கான்-
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவ்வுலகில் பிறந்து மறையும் வரை, பொறுமையின் பொக்கிஷமாய்த் திகழ்ந்தார்கள். எனவே, சகல முஸ்லிம்களும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, எச்சந்தர்ப்பத்திலும் இயன்றளவு பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு, நபிகளார் பிறந்த இன்றைய நன் நாளில் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றேன் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, தனது மீலாத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; முஸ்லிம் சமூகம், இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் என்றும் எதிர் நோக்காத ஒரு பாரதூரமான நெருக்கடியை கடந்த சில வாரங்களாக எதிர் நோக்கி வருகின்றனர். முஸ்லிம்களை அநியாயமாக வம்புக்கு இழுத்து, பிரச்சினைகளை உருவாக்கி, நாட்டை மீண்டும் அதல பாதாளத்திற்குத் தள்ளும் ஒரு நடவடிக்கையாகவே ஒரு சில கடும் போக்குள்ள அமைப்புக்கள் இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.
உண்மையில் கடந்த சில தினங்களாக உருவாகியுள்ள இவ்வாறான நிலைமைகள் குறித்து முஸ்லிம் சமூகம் மிகவும் நிதானமாகவும், அவதானமாகவும், பொறுமையுடனும், விழிப்புடனும் செயற்படுவதே சிறந்ததாகும்.
இன்று பள்ளிவாசல்கள் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சூழ் நிலையில், முஸ்லிம் சமுதாயம் தமது அழகிய குணங்கள் மூலம், செயல் ரீதியிலான நடவடிக்கைகள் மூலம், சிறந்த வாழ்வியல் தத்துவங்கள் மூலம் பதிலடி கொடுப்பவர்களாய்த் திகழ வேண்டும்.
கோபத்தை அடக்கி பொறுமை, பணிவு மற்றும் விட்டுக் கொடுப்புக்களில் முஸ்லிம்கள் அல் குர்ஆனின் அழகிய வழிகாட்டலில் நிலைத்திருப்பார்களாயின், உலகின் அறிவாளிகள் சமுதாயம் முஸ்லிம் சமுதாயத்தின் பின்னால் அணி திரள்வது சுலபம்.
மத ஒற்றுமையை நாம் பலப்படுத்த வேண்டும். முஸ்லிம் பௌத்த நீண்டகால உறவுகளுக்கு பங்கம் ஏற்படக் கூடாது. சமாதானச் செயற்பாடுகளைச் சீர் குலைக்கும் நடவடிக்கைகள் ஏற்படக் கூடாது.
இறைவனால் அருளப்பட்ட புனித குர்ஆன், சமாதானத்தை மக்களிடையே வற்புறுத்தி நிற்கின்றது. குர்ஆனின் போதனைகள் உலக மக்களிடையே ஒற்றுமையையும் சக வாழ்வையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் எப்பொழுதும் சமாதானத்தையே விரும்பி, அதன் வழியிலேயே செயற்பட்டிருக்கின்றார்கள்.
இன நல்லுறவைப் பேணிப் பாதுகாப்பதற்காகவே நாட்டில் நல்லாட்சி, சிறுபான்மை மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது. எனவேதான், சமூகத் தலைமைகள் இந்த விடயங்கள் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அரச தரப்பிலும் சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டிலுள்ள சகல இனங்களுக்கு மத்தியிலும் சமாதானத்தை ஏற்படுத்த அரும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையில் இது நல்லாட்சியில் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.
எனவேதான், சிறுபான்மை மக்கள் இச்சந்தர்ப்பத்தில் அமைதி காத்து வருமாறு கேட்டுக் கொள்வதோடு, குறிப்பாக முஸ்லிம் மக்கள் தமது ஐவேளைத் தொழுகையின் போதும் நாட்டின் சுமூக நிலை ஏற்படுவதற்குப் பிராத்திக்குமாறும் இச் சந்தர்ப்பத்தில் வேண்டிக் கொள்கின்றேன்.
இந்நாட்டில் வாழும் பல்லின பல மொழிகள் பேசும், பல கலாசாரங்களைப் பின்பற்றும் அனைத்து மக்களும் தங்களது வேற்றுமைகளை மறந்து, அன்புடனும் அரவணைப்புடனும் திறந்த மனதுடனும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து ஐக்கியமாக ஒன்றாக முயற்சி செய்துஇ இந்நாட்டையும், நாட்டுத் தலைவர்களையும் மக்களையும் சமாதானத்துடன் கூடிய அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்பதே, இன்றைய மீலாத் தினத்தின் எனது விசேட செய்தியும், எனது பிரதான குறிக்கோளுமாகும்.
