சூழலை பாதுகாக்காமல் நாட்டை பாதுகாக்க முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பையிஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். நேற்று மஹரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஹோமாகம தேர்தல் தொகுதியில் 1,200 குடும்பங்களுக்கான கொம்போஸ்ட் கொள்கலன்கள் வழங்கும் நிகழ்வு, பனாங்கொட, லெனகள கனிஷ்ட பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இந்திக கோரலகே அவர்களது ஏற்பாட்டில் அமைச்சர் பையிஸர் முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மேல்மாகாண முதலமைச்சர் அசுர தேவப்ரிய, ஹோமாகம பிரதேச சபையின் செயலாளர் விஜேரத்ன மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின், திண்மக்கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையத்தினூடாக கொம்போஸ்ட் கொள்கலன்களுக்காக40 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹோமாகம பிரதேச செயலாளர் பிரிவில், நாவலமுள்ள மற்றும் வால்பிட்ட கிராம சேவகர் பிரிவுகளில்1200 குடும்பங்களுக்கு கொள்கலன்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. திண்மக்கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையத்தினூடாக இவ்வருடம் 540 லட்சம் ரூபா செலவில் 15,000 கொம்போஸ்ட் கொள்கலன்கள் நாடுபூராகவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், "இலங்கையில் மட்டுமல்லாமல் உலகில் அனைத்து பாகங்களிலும் சூழல் மாசடைகின்றது. இதனை தடுப்பதட்கு நாம் அனைவரும் முன்வரவேண்டும். எமது சூழலை பாதுகாக்க முடியாது போனால் எமது நாட்டை எம்மால் பாதுகாக்க முடியாது போகும். இதட்கு முன்னர் இருந்த ஜனாதிபதி பல அமைச்சுக்களை தன வசம் வைத்திருந்தார் ஆனாலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சுற்றாடல் அமைச்சராக சூழலை அடுத்த தலைமுறையினருக்கு பாதுகாத்து கொடுக்க நடவடிக்கைகைளை எடுத்து வருகின்றார். இந்த நடவடிக்கைக்கு நாம் நமது பங்களிப்பை வழங்க வேண்டும். அதே போன்று நீங்கள் அனைவரும் இதட்கு ஒத்துழைப்பு வழங்காமல் சூழலை பாதுகாக்க முடியாது.
எமது அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட வகைப்படுத்தப்பட்ட கழிவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டத்தின் பிரச்சனைகளை இனம்கண்டு வருகின்றோம். அவற்றலுக்கான சரியான தீர்வுகளை வழங்கி உள்ளூராட்சி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தவும் நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். கழிவுகளை எவ்வாறேனும் அகற்றாமல் சூழலை பாதுகாக்க முடியாது இந்த கொம்போஸ்ட் கொள்கலன்களை பயன்டுத்தி சூழலை பாதுகாப்போம்" என் தெரிவித்தார்.
அமில பாலசூரிய,
கௌரவ அமைச்சரின் ஊடக செயலாளர்,
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு.
