திருகோணமலை மாவட்டம் தோப்பூரில் இயங்கி வரும் உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட உள்ளது. திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மற்றும் தோப்பூர் பிரமுகர்கள் ஆகியோர் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவை சந்தித்துக் கலந்துரையாடிய போது இந்த உறுதிமொழி அமைச்சரால் வழங்கப்பட்டது.
இம்ரான் எம்.பி யின் ஏற்பாட்டில் (நேற்று) புதன்கிழமை காலை உள்நாட்டலுவல்கள் அமைச்சில் இச்சந்திப்பு இடம் பெற்றது. இதன் போது பின்வரும் கோரிக்கைகள் அமைச்சரிடம் முன் வைக்கப்பட்டன.
மூதூர் பிரதேச செலயகத்தின் உப செயலகமாக இயங்கி வரும் தோப்பூர் உப செயலகத்தை பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தித் தர வேண்டும். அதுவரை வாரத்தில் 3 நாட்கள் இயங்கும் இந்த அலுவலகத்தை 5 நாட்களும் இயங்கச் செய்ய வேண்டும். இங்கும் பொதுமக்கள் தினமொன்றை தீர்மானித்து அந்த நாளில் கள உத்தியோகத்தர்கள் அங்கு சமூகமளிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை செவிமடுத்த அமைச்சர் விரைவில் அமுலுக்கு வரும் வகையில் தோப்பூர் உப பிரதேச செயலகம் வாரத்தில் 5 நாட்களும் இயங்கும். உதவி பிரதேச செயலாளர் ஒருவர் அங்கு தொடர்ந்து கடமை புரிய ஏற்பாடு செய்யப்படும். அத்தோடு கள உத்தியோகத்தர்கள் சமூகமளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும் என உறுதியளித்தார்.
அடுத்த ஆண்டு புதிய பிரதேச செயலக உருவாக்கம் சம்பந்தமான ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைக்காக தோப்பூர் பிரதேச செயலகக் கோரிக்கையை கையளித்து தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இதன் போது அமைச்சர் உறுதி அளித்தார்.
தோப்பூர் உப பிரதேச செயலகம் கடந்த 2007 முதல் இயங்கி வருகின்றது. வாரத்தில் 3 நாட்கள் மட்டும் மூதூர் உதவி பிரதேச செயலாளர் இங்கு கடமை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


