ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் தொகுதி, கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகம், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை நிருவாக எல்லைகளுக்கு உட்பட்ட ரிதிதென்ன கிராம சேவகர் பிரிவில் ஜயந்தியாய கிராமத்தில் மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லவினால் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச இஸ்லாமிய பல்கலை கழகமானது (மட்டக்களப்பு பல்கலை கழகம்) எதிர்கால வரலாற்றில் சரித்திரம் படைக்க போகும் விடயம் என்பதில் எவரிடமும் மாற்றுக்கருத்திருக்க வாய்ப்பிலை.
இரஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் தனிப்பட்ட முயற்சியினாலும்,சவூதி அரசாங்கத்தின் நூறு விகித நிதி உதவியுடனும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் குறித்த இஸ்லாமிய சர்வதேச பல்கலை கழகமானது இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளை பேசும் எல்லா மதத்தினையும் சார்ந்த மாணவர்கள் அனைவரும் சர்வதேச நாடுகளில் இலகுவாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் தாங்கள் விரும்பிய பட்டப்படிப்புக்களை சர்வதேச தரத்திற்கு அமைவாக நிறைவு செய்து கொள்ள முடியும் என்பது இங்கு முக்கியமான விடயமாகும். ஆகையால் ஹிஸ்புல்லாவினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் குறித்த பல்கலை கழகமானது இந்த நாட்டுக்கும் சமூகத்திற்கும் பாரிய வரப்பிரசாரமாக இருப்பதோடு அவருடைய அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொரு விடயமாக படித்த தூரநோக்கு சிந்தனைகள் கொண்ட புத்திஜீவிகளினால் பார்க்கப்படுகின்றது.
கடந்த மஹிந்த ராஜபக்ஸ்ஸ அரசாங்க காலத்தில் இந்த நாட்டு சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் பல்வேறு பட்ட இன்னல்களுக்கு முகம்கொடுத்த நிலையில் மஹிந்த ராஜபக்ஸ்ஸ அரசாங்கத்தினை தூக்கி எறிய ஹிஸ்புல்லாஹ் தவறி விடார் என்றும், இந்த நாட்டில் தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்திற்கும் ஹிஸ்புல்லாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஹிஸ்புல்லாஹ் பலராலும் பலவாறு விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அவர் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்திருந்தும் அவருக்கு தேசியப்பட்டியல் மட்டுமல்லாமல் அதற்கு ஒரு படி மேலே சென்று மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சினையும் வழங்கி கெளரவித்திருந்தார்கள்.
ஆகவே நல்லாட்சி அரசாங்கத்தில் ஹிஸ்புல்லா ஜனாதிபதியினாலும் பிரதமரினாலும் அவ்வாறு கெளரவிக்கப்பட்டமையானது தேசிய அரசியல் என்றாலும் சரி, இந்த நாட்டின் முன்னேற்றத்தினுடைய அபிவிருத்திகளாக இருந்தாலும் சரி ஹிஸ்புல்லாவினுடைய பங்கு இந்த நாட்டுக்கு முக்கிய தேவையாக இருக்கின்றது என்பதனையே உணர்த்தி நிற்கும் விடயமாக பார்க்கப்படுகின்றது. பேரினவாத சக்திகளாலும், ஹிஸ்புல்லா மீது அரசியல் காற்புணர்ச்சி கொண்ட அரசியல் வாதிகளினால் ஹிஸ்புல்லாவின் இத்திட்டமானது பலவாறு விமர்சிக்கப்பட்டாலும் தற்பொழுது இந்த நாட்டில் உள்ள நல்லாட்சி அரசாங்கத்திலும் சரி ஹிஸ்புல்லாவின் அரசியல் வரலாற்றில் அவர் கண்ட இந்த நாட்டு தலைவர்கள் அனைவரும் ஹிஸ்புல்லாவிற்கு அரசியலில் உயர் பதவிகளை வழங்கி இந்த நாட்டின் அபிவிருத்திகளுக்கு அவருடைய பங்களிப்பினை வழங்க வைத்திருப்பதானது அவருடைய அரசியல் முதிர்சிக்கும், திறமைக்கும் கிடைத்த வரலாற்று சான்றுகளாகவே பார்க்கப்படுகின்றது.
அது மட்டுமல்லாமல் இந்த நாட்டினுடைய முஸ்லிம்களின் வரலாற்றில் பேருவளை நளீம் ஹாஜியார் ஜாமியா நளீமியா எனும் பல்கலை கழகத்தினை நிறுவி இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இஸ்லாமிய நளீமீ பட்டதாரிகளை உருவாக்கியது மட்டுமல்லாமல் சட்டதரணிகள், நீதிபதிகள், அரச உயர் அதிகாரிகள் என சர்வதேச போற்றும் அளவிற்கு தனது பங்களிப்பினை இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்திற்காய் வழங்கியிருந்தார்கள். அதே போன்று பெரும் தலைவர் அஸ்ரஃப் தென்கிக்ழகு பல்கலை கழககத்தினை கிழக்கு மகாணத்திலே நிறுவி அரசியல் அனாதைகளாக கல்வி துறையில் மடமைகளாக்கப்பட்டிருந்த இந்த நாட்டு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஜனநாயக அரசியலின் ஊடாக உரிமைகளை எவ்வாறு வென்றெடுப்பது என்பதனை செயல் வடிவில் காட்டிச்சென்றிருந்தார்.
அதே பாணியில் பெரும் தலைவரின் அரசியல் பாசறையில் வளர்க்கப்பட்ட ஹிஸ்புல்லா இன்று மட்டக்களப்பு கல்குடாவில் நிர்மாணித்து வரும் சர்வதேச இஸ்லாமிய பல்கலை கழகமானது ஹிஸ்புல்லாவின் மரணத்திற்கு பின்னால் இந்த நாட்டில் வாழுக்கின்ற முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த அனைத்து சமூகமும் ஹிஸ்புல்லாவினை வாழ்த்தி அவருடைய பெயர் நாமம் உச்சரிக்கும் என்பது அழிக்க முடியாத ஒரு வரலாறாக எழுதப்படும் என்பதில் எவரிடமும் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்தாகும்.


