முல்லைத்தீவில் இருந்து கடல்மார்க்கமாக படகொன்றில் கடத்தி திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட 140 கிலோ கிராம் கேரளா கஞ்சா நிலாவெளி பிரதேசத்தில் வைத்து இன்று (14) அதிகாலை 2 மணியளவில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மருதமுனை 06.ஹல்மிலன் வீதி இலக்கம் 56/30 வசித்துவரும் எம்.எஸ்.முகம்மது பாயிஸ் (37வயது) அம்பாறை.மத்திய முகாம் வீதியைச்சேர்ந்த யூ.எல்.முகம்மட் றியாத் (35வயது) மற்றும் கல்முனை.பீ.பீ.வீதி இலக்கம் 468இல் வசித்துவரும் எம்.எஸ்.ஜெய்னுதீன் (58வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பிராந்திய துர்நடத்தை ஒழிப்பு பிரிவின் பொலிஸ் குழு ஒன்று குறித்த பிரதேசத்தில் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டது. முல்லைத்தீவிலிருந்து கடல் மார்க்கமாக ஒரு தொகை கஞ்சா வழியாக கடத்தி வருவதாக தமக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து குறித்த பிரதேசத்தில் பொலிஸ் குழுவொன்று மறைந்திருந்தது. அவ்வாறு மறைந்திருந்த வேளையில் அவ்வழியாக பயணித்த வானொன்றை அக்குழு வழிமறித்து சோதனை நடத்தியது. அந்த வானில் மூவர் இருந்ததுடன் வானிலிருந்து 140 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
