மீள் வாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதித் தேர்தலில் மில்லியன் கணக்கானோர் சட்டவிரோதமாக வாக்களித்துள்ளதாக குற்றஞ் சுமத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்பை விட, ஹிலாரி கிளிண்டன் 20 இலட்ச கூடுதல் வாக்குகளை பெற்றார். ஆனால் ட்ரம்ப் தேர்தல் கல்லூரியில் கூடுதலான வாக்குகளைப் பெற்றதையடுத்து புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எனவே மீள் வாக்கு எண்ணிக்கை நடத்தும்படி கிரீன் கட்சி வேட்பாளர் ஸ்டெயின், விஸ்கொன்ஸின் மாநிலத்தில் மனு செய்துள்ளார். மிச்ஸிகன், பென்சில்வேனியாவிலும் மீள் வாக்கு எண்ணிக்கை கோர இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார், இவருக்கு ஹிலாரியின் ஜனநாயக கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆனால் இதை ட்ரம்ப் எதிர்த்துள்ளார். தேர்தலில் எனது வெற்றி ஒப்புக் கொள்ளப்பட்டது. தற்போது மீள் வாக்கு எண்ணிக்கை விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் டுவிட்டரில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் தேர்வாளர்களின் வாக்குகள் மூலம் நான் சுலபமாக வெற்றி பெற்றேன். அதே நேரத்தில் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டுள்ள வாக்குகளை நீக்கியிருந்தால் மக்கள் வாக்குகளிலும் நான் வெற்றி பெற்றிருப்பேன். நான் 3 அல்லது 4 மாநிலங்களில் மட்டுமே பிரசாரம் செய்தேன். 15 மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. அனை த்து இடங்களிலும் பிரசாரம் செய்திருந்தால் மக்கள் வாக்குகளிலும் சுலபமாக வெற்றி பெற்றிருப்பேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் விர்ஜீனியா, நியூ ஹாம்ஷயர், மற்றும் கலிபோர்னியா மாநிலங்களில் சட்டவிரோதமாக வாக்குகள் செலுத்தப்பட்டன. இது குறித்து அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை என குற்றஞ்சுமத்தியுள்ளார்.