அஸ்லம் எஸ்.மௌலானா-
சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசல் மையவாடியை புனரமைக்கும் வேலைத்திட்டத்திற்கு கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீதின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஒரு இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இவ்வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை முன்னாள் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா, செயலாளர் எம்.ஐ.ஏ.மஜீத், ஜனாஸா நலன்புரி குழுவின் தலைவர் எம்.ஐ.உதுமாலெப்பை, மரைக்காயர்களான ஏ.சி.எம்.முஹம்மட், ஏ.ஏ.ஹமீட், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.சமால்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிதியின் மூலம் குறித்த மையவாடியின் வட-கிழக்கு பக்கம், கூபா பள்ளிவாசலுக்கு முன்பாக புதிய நுழைவாயில் ஒன்று அமைக்கப்படுவதுடன் சுற்றுமதில்களுக்கு பெயிண்ட் பூசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா தெரிவித்தார்.
இப்புனரமைப்பு வேலைக்கு உதவ முன்வந்த கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், முன்னாள் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத் ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் இம்மையவாடியில் செயலிழந்திருந்த மின் விளக்குகளை அவசரமாக மாற்றியமைத்து ஒளியூட்டித்தந்த கல்முனை மாநகர ஆணையாளர் ஜெ.லியாகத் அலிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.
மையவாடி சுற்றுமதில்களுக்கு பெயிண்ட் பூசுதல் மற்றும் சிரமதானப் பணிகளை மேற்கொள்ள டஸ்கஸ், பிளைங்க் ஹோர்ஸ் ஆகிய விளையாட்டுக்கு கழகங்கள் முன்வந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

