க.கிஷாந்தன்-
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை – கொணன் தோட்டத்தின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் தெற்கு வாசல் உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்த இனந்தெரியாதவர்களால் இவ்வாலயத்தின் உண்டியல் பெட்டியை களவாடிச் சென்றுள்ளனர்.
31.10.2016 அன்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.சுபசிங்க தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
2015.11.27 அன்று இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதன்போது அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட தங்க நகைகள், ஆலய பரிபாலன சபையின் அனுமதியுடன் பாதுகாப்பான வேறு ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் 31.10.2016 அன்று இரவு வேளை இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் ஆலய குருக்களின் வீட்டையும் உடைத்து வீட்டில் இருந்து தொலைக்காட்சி பெட்டி மற்றும் டீ.வீ.டீ பிளயர், ஒரு தொகை பணமும் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைபாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது வீட்டில் யாரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. அத்தோடு சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.




