கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து சுய தொழிலுக்கான கோழி வளர்ப்பு திட்டத்தின்கீழ் கோழிக் குஞ்சுகளை வழங்கும் நிகழ்வு இன்று (30.11.2016) காத்தான்குடி அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.
அரச கால்நடை வைத்திய சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் திருமதி L.டுஜித்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபை செயலாளர் S.M.M. ஸபி ஆகியோர் கலந்துகொண்டு கோழிக் குஞ்சுகளை பயனாளிகளிடம் வழங்கி வைத்தனர்.
வறிய குடும்பத்தை சேர்ந்தவர்களை இனங்கண்டு சுய தொழில்களை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அவர்களின் குடும்பப் பொருளாதார நிலையினை மேம்படுத்தும் நோக்கில் காத்தான்குடி பிரதேசத்தினை சேர்ந்த 37 பேருக்கும், மண்முனை வடக்கு பிரதேசத்தினை சேர்ந்த 16 பேருக்கும் இதன்போது கோழிக் குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறூக்
“இத்தைகைய சிறிய உதவித்திட்டங்களை வழங்குவது மாத்திரமின்றி எதிர்காலங்களில் மேலும் பல உதவித்திட்டங்களை பெற்றுக்கொடுப்பதனூடாக பின்தங்கிய நிலையிலுள்ள குடும்பங்களின் பொருளாதார நிலையினை உயர்த்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளோம்.
மேலும் இன, மத வேறுபாடுகளில்லாமல் இத்தகைய எமது உதவித்திட்டங்களுக்குள் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் உள்வாங்கப்பட்டுள்ளதனைப் போன்று எதிர்வரும் காலங்களிலும் சிறுபான்மை மக்கள் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் தமது அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.


