125 பில்லியன் ரூபா நஷ்டத்தை புறம் ஒதுக்கி வைத்துள்ள அரசாங்கத்திற்கு, தான் அனுமதிபத்திரத்தில் இறக்குமதி செய்த வாகனம் பாரிய பிரச்சினையாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராவதற்காக நேற்று அங்கு சென்றிருந்த போதே நாமல் இதனை கூறியுள்ளார். நான் வாகனத்தை இறக்குமதி செய்தது பிரச்சினை என்றால், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்க, அனுமதிப்பத்திரத்தில் பெரிய பச்சை நிற ஜீப் ஒன்றை இறக்குமதி செய்தி பயன்படுத்தினார். அவை பற்றியும் விசாரிக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேரும் அனுமதிப்பத்திரத்தில் வாகனங்களை இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர். அது பற்றியும் தேட வேண்டும்.
அவற்வற்றை தேடுவதில்லை. கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கும் எங்கள் மீதுதான் இவர்களுக்கு பெரிய அக்கறை. நாட்டில் எது நடந்தாலும் ராஜபக்சவினர் காரணம். வடக்கில் உருவாகியுள்ள குழுக்களும் ராஜபக்சவினர் உருவாக்கிய குழுக்கள் என்று கூறுகின்றனர்.
கடன் பெற்றாலும் அது ராஜபக்சவினர் தான். துறைமுகம் சரியில்லை எனக் கூறிய ரணில் விக்ரமசிங்க தற்போது ஒரு பில்லியனுக்கு துறைமுகத்தை விற்கின்றார். இதேபோல் தான் ஹம்பாந்தோட்டை விமான நிலையமும்.
அன்று ஹம்பாந்தோட்டையில் மாத்திரம் அபிவிருத்தி செய்வதாக கூறிய ரணில் விக்ரமசிங்க, ஹம்பாந்தோட்டைக்கு சென்று தொழில் புரிய தயாராகுமாறு இளைஞர்களுக்கு கூறுகிறார்.
ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி குறித்து பொறாமைபட்டவர்கள். ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி வெற்றியென்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். பூகோள ரீதியாக ஹம்பாந்தோட்டைதான் துறைமுகத்திற்கு சிறந்தது என்பதை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் போது சிறந்த இடங்கள் இவர்களுக்கு தெரியவதில்லை. ஆட்சிக்கு வந்த பின்னர் சிறந்தவை கண்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளதா என்பது எனக்கு தெரியாது.
சட்டத்திற்கு முன் நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை ஒப்புவிப்போம். இந்த அரசியல் பழிவாங்கலை நிறுத்த வேண்டும். இதனை வார்த்தைகளுக்கு மாத்திரம் வரையறுக்க வேண்டாம். இன்று திஸ்ஸ அத்தநாயக்கவை சிறையில் அடைத்துள்ளனர். சரத் குணரத்னவை சிறையில் அடைத்துள்ளனர் என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.