காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இயங்கிவரும் உளநல மருத்துவ பிரிவின் செயற்திறனை அதிகரிக்கும் நோக்கில் கலந்துரையாடல் 2016.10.21ஆந்திகதி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது. காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியேட்சகர் M.S.M. ஜாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக், காத்தான்குடி நகரசபையின் செயலாளர் ஸாபி, காத்தான்குடி பிரதேச செயலககத்தின் உதவி பிரதேச செயலாளர் அப்கர், கோட்டக்கல்வி அதிகாரி M.S.A. பதுர்தீன் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்போது காத்தான்குடியில் மாத்திரம் 500ற்கு மேற்பட்ட உளவியல் ரீதியான குறைபாடு உள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும் பத்து நபர்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் உளவியல் சம்மந்தமான ஏதேனும் ஒரு பாதிப்புக்குள்ளானவர்கள் இருக்க முடியும் என கருதப்படுகின்றது. இத்தகைய உளவியல் சார்ந்த பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கின் முயற்சியில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அண்மையில் “உறவின் உதயம்” உளநல பிரிவு ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டு சிறந்த முறையில் இயங்கி வருகின்றது.
இருப்பினும் இப்பிரிவின் செயற்திறனை அதிகரித்து சிறந்த சேவையினை வழங்கும் நோக்கில் தற்போது காணப்படும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி இக்கலந்துரையாடல் நிகழ்வின்போது கலந்தாலோசிக்கப்பட்டது. இப்பிரிவுக்கான ஆளணி பற்றாக்குறை, உளவியல் குறைபாடுள்ளவர்களை அழைத்து வந்து சிகிச்சை வழங்குவதற்கான வாகன வசதி, பாதுகாப்பு போலிஸ் உத்தியோகத்தர்கள் தேவை மற்றும் உளவியல் பிரச்சினைகள் தொடர்பான நேரடி முறைப்பாட்டு தொலைபேசி முறையினை அறிமுகம் செய்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்குமாறு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியேட்சகர் M.S.M. ஜாபிர் மாகாண சபை உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
தற்போது பற்றாக்குறையாகவுள்ள ஆளணி மற்றும் ஏனைய விடயங்களுக்கான தீர்வுகளை மாகாண சபை மூலம் விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சியினை மேற்கொள்வதாக இதன்போது மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் வாக்குறுதியளித்தார். மேலும் பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் உளரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாதல் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்து கொள்ளவேண்டிய முறை தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இந்நிகல்வுகளைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் புனரமைப்பு பணிகளையும் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் பார்வையிட்டார்.