ஏ.எம்.றிகாஸ்-
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் பின்தங்கிய பகுதியான ஏறாவூர் -மீராகேணி பிரதேசத்தில் அமைந்துள்ள மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்தில் தளபாடக்கையளிப்பு மற்றும் மாணவத் தலைவர்களுக்கான இலட்சினை சூட்டும் நிகழ்வும் வெகு சிறப்பாக நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா இதில் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.
பன்முகப் படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதியின்மூலம் கொள்வனவு செய்யப்பட்ட தளபாடங்கள் இதன்போது கையளிக்கப்பட்டன. அத்துடன் இவ்வாண்டில் தெரிவுசெய்யப்பட்ட மாணவத்தலைவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டதுடன் கடந்த வருடம் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பாடசாலை அதிபர் எம்எம் முகைதீன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏஎஸ் இஸ்ஸதீன், சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் பணிப்பாளர் எம்ஐ வஹாப்தீன் ,; கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் எம்ஆர் ஷியாஉல் ஹக் மற்றும் ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்எச்எம் ஹமீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இப்பாடசாலையிலுள்ள ஆராதனை மண்டபத்தில் தளபாடம் இன்மையினால் கடந்த காலங்களில் விழாக்களுக்கு அழைக்கப்படும் அதிதிகளுக்கு ஆசிரியர் கதிரைகளையே பயன்படுத்தவேண்டிய நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.