எம்.ரீ.ஹைதர் அலி-
மட்டக்களப்பு மாவட்டத்தின், காத்தான்குடி பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள வாவிக்கரை வீதியினை புனரமைப்பு செய்வதற்காக கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் அவ்வீதி உள்வாங்கப்பட்டு பத்து லட்சம் ரூபா செலவில் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வீதியானது பல வருட காலமாக புனரமைக்கப்படாமல் இருப்பதனால் மழை காலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதன் காரணமாக அப்பகுதி மக்களும் அவ்வீதியினை பயன்படுத்துகின்றவர்களும் இப்பகுதியில் ஆற்றங்கரை மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களும் பல்வேறு இடர்களுக்கும், அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர்.
இவ்வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து மக்கள் பங்களிப்புடன் இவ்வீதியினை புனரமைக்க கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வீதியானது உள்வாங்கப்பட்டுள்ளது.
இவ்வீதியானது சிறந்த முறையில் நீர் தேங்கி நிற்காமல் வடிந்தோடக்கூடிய முறையிலும் சிறந்த தரமுள்ள கொங்ரீட் கலவைகள் இடப்பட்டு இவ்வீதி அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் காத்தான்குடி நகரசபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுடன் உரிய இடத்திற்கு 2016.09.30ஆந்திகதி கள விஜயமொன்றினை மேற்கொண்டார்.
இதன்போது புனரமைப்பு வேலைகளை பார்வையிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அங்கு புனரமைப்பிற்காக பயன்படுத்தப்பட்டுள்ள கிரவல் தரமற்றது என்பதனை அறிந்தவுடன் போடப்பட்டுள்ள கிரவல் அனைத்தையும் அகற்றி தரமான கிரவல் இடுவதற்கு உடனடியாக கொந்துராத்து காரருக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து போடப்பட்ட கிரவல் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டு தரமான புதிய கிரவல் இடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
முறையான மேற்பார்வை மற்றும் கவனயீனம் காரணமாகவே கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிகமான அபிவிருத்திகள் மக்களுக்கு பயனற்றதாகவும் மக்களின் பணத்தினை வீணடிக்கும் அபிவிருத்தியாகவும் அமையக் காரணமாகும். மேலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் அனைத்தும் சரியான முறையில் உரிய அதிகாரிகள் மற்றும் அரசியல் அதிகாரங்களில் உள்ளவர்களினால் மேற்பார்வை செய்யப்படும் போது அவ் அபிவிருத்தி சிறந்த ஒன்றாக அமையும் என்பதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் இந்த நடவடிக்கை ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.



