பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் கொக்குவில் - குளப்பிட்டி சந்தியில் இன்று அதிகாலை பல்கலை மாணவர்கள் இருவர் உயிரிழந்தமை தொடர்பாக ஆரம்பத்தில் விபத்து என தெரிவித்த பின்னர் தற்போது பிரேத பரிசோதனையில் துப்பாக்கி சூட்டு காயங்களால் தான் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தற்போது தெரிவித்துள்ளன.
ஆனால் இந்த மாணவர் மீதான துப்பாக்கி சூட்டை பொலிஸார் மேற்கொள்ளவில்லை என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய சிரேஸ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளதுடன் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகாமையில் துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டதாக பொதுமக்கள் தம்மிடம் கூறியதாகவும் தெரிவித்து வருகின்றார். எனினும் உத்தியோக பூர்வமாக இன்னும் இக்கருத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.
தற்போது யாழ் போதனா வைத்தியசாலை பிணவறை அருகில் பதற்ற நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தை ஆரம்பத்தில் பொலிஸ் தரப்பு துப்பாக்கி சூடு விழுந்த காயமாக காட்டாது விபத்தினால் ஏற்பட்டதாக உடற்கூற்று பரிசோதனையில் விபத்து காயமாக எழுதி வெளியிடுமாறு கோரி நிர்ப்பந்தித்து வந்திருந்ததை அங்குள்ள ஊழியர் மாணவர்களிற்கு தெரிவித்ததை அடுத்து இப்பதற்ற நிலை எழுந்துள்ளது.
எனினும் வைத்தியசாலை நிர்வாகம் அதற்கு ஒப்புதல் தெரிவிக்காது துப்பாக்கி சூட்டு காயங்களினால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையை வெளியிட முனைப்பு காட்டி வருகின்றது. இன்னும் உத்தியோக பூர்வமாக அதை வெளியிட வில்லை.
இதே வேளை சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு காலை சென்ற யாழ் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் இவ்விரு மாணவர்களும் விபத்து காயங்களினால் ஏற்பட்ட பலமான அடி காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிக்கையிட்டுள்ளதாக கூறி சென்றுள்ளார். எனவே தான் இவ்விடயம் தொடர்பாக பல முன்னுக்குப் பின்னான தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இந்த விபத்து தொடர்பாக ஆரம்பத்தில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (23) மற்றும் சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (24) ஆகிய மாணவர்கள் குறித்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மதிலொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர். இதனையே சில ஊடகங்களில் செய்தியாக பிரசுரித்தும் இருந்தனர்.
தற்போதைய வைத்தியசாலை தகவலின் படி மோட்டர் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவனின் கையின் ஊடாக துப்பாக்கி குண்டு துளைத்து கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தற்போது யாழ் வைத்தியசாலை சவச்சாலைக் கருகில் உள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலையேற்பட்டுள்ளது.
இவர்களை கட்டுப்படுத்த யாழ்ப்பாண பொலிஸ் சமரச முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து கொலை குற்றவாளிகளை கைதுசெய்யும் வரை குறித்த மாணவர்களின் சடலத்தை வைத்தியசாலையில் இருந்து வெளியில் கொண்டு செல்ல தாம் அனுமதிக்கபோவதில்லையென மாணவர்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வைத்தியசாலைக்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு அப்பகுதி பதற்ற நிலைக்கு உள்ளாகியுள்ளது.
தற்போது கூட ஒரு மாணவனின் மரணம் துப்பாக்கி சூடு காரணமாகவே நிகழ்ந்து மற்றைய மாணவன் தலையில் காயம் ஏற்பட்டமையால் நிகழ்ந்துள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த நிலையில் இன்று குறித்த மாணவர்களின் மரணத்திற்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் எனக் கூறி யாழ் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து உயிரிழந்த மாணவர்களின் பிரேதபரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெறுவதால் வைத்தியசாலையின் வளாகத்தில் பதற்றமான நிலை காணப்படுகின்றது. பல்கலைக்கழக கல்வியை புறக்கணித்த மாணவர்கள் வைத்தியசாலைக்கு படையெடுத்துள்ளதுடன் பிரேத அறைக்குள்ளும் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
இதனால் மாணவர்களை வெளியேற்றிகதவுகள் அடைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பகல் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்றிருந்த மாவை சேனாதிராஜாவை பல்கலைக்கழக மாணவர்கள் சுற்றிவளைத்துள்ளதுடன்இ இது விபத்து அல்ல கொலை என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் குறித்த பகுதியிலிருந்து துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதாகவும்இ இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பிரதேச மக்கள் தெரிவித்ததுடன் மாணவர்களும் இது உண்மையாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இதனால் பிரேத அறிக்கை உத்தியோக பூர்வமாக வெளிவரும்வரை மக்கள் மாணவர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸார் எனப் பலரும் யாழ் போதனா வைத்தியசாலையை முற்றுகையிட்டுள்ளனர். இதையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும், உண்மைகள் வெகுவிரைவில் வெளிக்கொணரப்படும் எனவும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பொலிஸ் அதிகாரிகள் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.