வடக்கு-கிழக்கு இணைப்பு : அதாவுல்லாவின் ஆரவாரமும் ஹக்கீமின் மௌன விரதமும்

டக்கு-கிழக்குத் தமிழர்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் இந்த ஆட்சியில் காணப்படுகின்றபோதும்,அதை இலகுவாக-தமிழர்கள் விரும்புகின்ற விதத்தில் பெற்றுக்கொள்ள முடியாது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

தீர்வுப் பொதிக்குள் உள்ளடக்கப்பட வேண்டும் எனக் கோரி தமிழர்கள் விடாப்பிடியாக நிற்கும் சில கோரிக்கைகள்தான் இதற்குக் காரணம்.சமஷ்டி அடிப்படையிலான தீர்வுப் பொதிக்குள் வடக்கு-கிழக்கு இணைப்பு ,காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென தமிழர் தரப்பு கோருகின்றபோதிலும்,வடக்கு-கிழக்கு இணைப்புக் கோரிக்கை மீதுதான் இன்று நாட்டின் முழுக் கவனமும் திரும்பியுள்ளது.

அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தை சிக்கலுக்குள் தள்ளிய விவகாரமாக இந்த வடக்கு-கிழக்கு கோரிக்கை அமைந்துள்ளது.தமிழர்கள் கேட்கும் ஏனைய விடயங்கள் சரியா,பிழையா என்று தேடிப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு வடக்கு-கிழக்கு இணைப்புக் கோரிக்கை மீதே முழு நாட்டின் பார்வையும் பதிந்துள்ளது.

இந்தக் கோரிக்கை இவ்வாறு அதிகம் சர்ச்சையில் சிக்கியுள்ளமைக்கும் அதிகம் பேசப்படுகின்றமைக்கும் இரண்டு விடயங்களே காரணமாக அமைந்துள்ளன.வடக்கு-கிழக்கு இணைப்பு தனித் தமிழீழத்தை உருவாக்கிவிடும் என்று சிங்களவர்கள் கருதுவதும் இந்த இணைப்பு தமது சனத் தொகை விகிதாசாரத்தைக் குறைத்துவிடும் என்று முஸ்லிம்கள் அஞ்சுவதுதான் அந்த இரண்டு விடயங்களுமாகும்.

இந்த இரண்டு விடயங்களையும் அடிப்படையாக வைத்து அரசியல் லாபம் தேடுவதற்கு முற்படும் -சரிந்து போன தமது அரசியல் செல்வாக்கைத் தூக்கி நிறுத்தத் துடிக்கும் அரசியல்வாதிகளால் இந்த வடக்கு-கிழக்கு இணைப்பு விவகாரம் மேலும் சூடேற்றப்படுகின்றது.

தெற்கில் மஹிந்த அணியும் கிழக்கில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா உள்ளிட்ட தரப்பினரும் இந்த விவகாரத்தைத் தூக்கிப் பிடிக்கின்றனர்.இந்த இரண்டு தரப்புகளும் மக்கள் செல்வாக்கை இழந்த தரப்புகளாக இருப்பதால் அவர்கள் இந்த வடக்கு-கிழக்கு இணைப்பு விவகாரத்தை நல்லமுறையில் பயன்படுத்தி வருகின்றனர்;மிகப் பெரிய துருப்புச் சீட்டாகப் பாவித்து வருகின்றனர்.

இவர்களுள் அதாவுல்லாவின் செயற்பாடு கவனிக்கத்தக்கதாகும்.வடக்கு-கிழக்கு இணைப்பை கிழக்கு முஸ்லிம் தலைமைகள் கொள்கையளவில் எதிர்க்கின்றபோதிலும்,அதற்கு எதிராக பகிரங்கமாக அவர்கள் அதிகம் குரல் கொடுத்ததில்லை.தமிழர்களின் மனங்களை புண்படுத்தாமல் சுமூகமாக வடக்கு-கிழக்கு இணைப்பு விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவைதே அதற்குக் காரணம்.

ஆனால்,அதாவுல்லா மட்டும் இதற்கு விதிவிலக்கானவர்.வடக்கு-கிழக்கு இணைப்புக்கு பகிரங்க எதிர்ப்பு என்பதே அவரின் அரசியல் துருப்புச்சீட்டாக இருந்து வருகின்றது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக் கட்சி அமைத்து அரசியல் செய்யத் தொடங்கியதும் அவர் வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிரான நிலைப்பாட்டைக் கடுமையாக்கிக் கொண்டார்.இணைந்திருந்த வடக்கு-கிழக்கை பிரிக்கும் போராட்டத்தை ஜேவிபி சந்திரிகாவின் ஆட்சியில் முன்னெடுத்தபோது கிழக்கில் அதாவுல்லாவும் அதே போராட்டத்தை முன்னெடுத்தார்.

ஜேவிபி தாக்கல் செய்த இது தொடர்பிலான வழக்குக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்டபோது அதன் வெற்றியை அதாவுல்லா தனதாக்கிக் கொண்டார்.தனது போராட்டத்தாலயே வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்டது என்று அவர் இப்போதுவரைக் கூறி வருகின்றார்.

வடக்கு-கிழக்கை பிரிப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்து அதன் மூலம் வெற்றியடைந்த ஜேவிபியே அந்த வெற்றியைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.ஆனால்,கிழக்கில் இருந்துகொண்டு வெறும் சத்தத்தை எழுப்பிய அதாவுல்லாவோ வடக்கு-கிழக்கு பிரிப்புக்கு உரிமை கோரி வருகின்றார்.அதாவுல்லா எழுப்பிய சத்தத்தால் எதுவும் நடக்கவில்லை.ஜேவிபி மேற்கொண்ட காய் நகர்த்தலால்தான் எல்லாமே நடந்தது.

அதாவுல்லாவின் தற்போதைய ஆரவாரம்:-

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதாவுல்லா தோற்கடிக்கப்பட்டதால் -மக்கள் செல்வாக்கை இழந்துள்ளதால் அந்தச் செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு துருப்புச் சீட்டு ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தார்.அந்தச் சந்தர்ப்பத்தில் அவருக்கென்றே உருவாக்கப்பட்டதுபோல் வந்து சேர்ந்ததுதான் அரசியல் தீர்வில் வடக்கு-கிழக்கு இணைப்பு என்ற விவகாரம். இதைக் கெட்டியாய்ப் பிடித்துள்ள அதாவுல்லா இதைக் கொண்டு இப்போது ஊரூராய் பிரசாரம் செய்து வருகின்றார்.

தனது முயற்சியால் பிரிக்கப்பட்ட வடக்கு-கிழக்கை மீண்டும் இணைக்கவிடமாட்டேன் என்று அவர் கூறி வருகின்றார்.வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்டபோது அதாவுல்லா எவ்வாறு அதற்கு உரிமை கூறினாரோ அதேபோல்,வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்ட நிலையில் தீர்வு வருகின்றபோது அதற்கும் தானே காரணம் என்று கூறப் போகின்றார்;இதன் மூலம் அரசியல் லாபம் அடைவதற்கு அவர் காய் நகர்த்துகின்றார்.

ஆகவே,இழக்கப்பட்ட தனது அரசியல் செல்வாக்கை மீளப் பெறுவதற்காகவே அதாவுல்லா வடக்கு-கிழக்கு இணைப்புக்கான எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.தனது செல்வாக்கைக் கட்டியெழுப்ப அதாவுல்லாவுக்கு வேறு வழி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹக்கீமின் மௌன விரதம்:-

இந்த விவகாரத்தில் கிழக்கின் முஸ்லிம் தலைமைகள் அனைத்தும் அவர்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றபோதிலும்,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மாத்திரம் இதைப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

வடக்கு-கிழக்கை இணைப்பதற்கு அரசு முன்வராது என்பதில் ஹக்கீம் உறுதியாக இருக்கின்றார்.நடக்காத ஒரு விடயத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும்;ஏன் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டும்;அப்படியான ஒரு விடயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏன் தமிழ் மக்களைப் பகைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவரின் கேள்வியாகும்.

வடக்கு-கிழக்கு இணைப்புத் தொடர்பில் ஏனைய முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாட்டை விடவும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடே கிழக்கு முஸ்லிம்களின் நிலைப்பாடாகப் பார்க்கப்படும் என்ற ஒரு நிலை இருப்பதால் ஹக்கீம் இந்த விடயத்தில் மூக்கை நுழைத்து தமிழ்-முஸ்லிம் மக்களின் உறவில் விரிசலை ஏற்படுத்த விரும்பவில்லை.

தமிழ்-முஸ்லிம் மக்களுடன் தொடர்புபட்ட எந்தவொரு விடயத்திலும் அவர்கள் முரண்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தனது நாவை மிகவும் கவனமாகப் பாதுகாத்து வரும் ஹக்கீம் வடக்கு-கிழக்கு இணைப்பு விவகாரத்திலும் அவ்வாறேதான் நடந்துகொள்கின்றார்.

இருந்தும்,இந்த விவகாரத்தில் இருந்து முற்றாக நீங்கிவிடாமல் ''வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு தனி அலகு வேண்டும்''என்ற ஓர் இராஜதந்திரக் கொள்கையை முஸ்லிம் காங்கிரஸ் கொண்டிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மொத்தத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்பில் அதாவுல்லா ஆரவாரம் செய்வதற்கும் ஹக்கீம் மௌனம் காப்பதற்கும் மேற்கூறப்பட்டுள்ள விடயங்கள்தான் உண்மையான காரணங்களாகும்.
எம்.ஐ.முபாறக்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -