தற்கொலை செய்த இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜயமான்ன, லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட தினத்தில், கொழும்பில் இருக்கவில்லை என்பது பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தகு வள பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.
பண்டாரகமவில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டமெமான்றில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேஜர் ஜயமான்ன,,லசந்த விக்ரமதுங்க கொலை செய்தது தானே எனவும், கைது செய்யப்பட்டுள்ள தனது நண்பரை விடுவிக்குமாறும் தெரிவித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், அந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியரை, கொலை செய்தனர்.
“லசந்த கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மறுத்த அவர்கள், அது தொடர்பில் பொய்யான வதந்திகளையும் பரப்பி வந்தனர். தற்போது, லசந்தவை கொலை செய்த கொலையாளிகளை, எமது திறமையான பொலிஸ் அதிகாரிகள், சாதூர்யமான முறையில் விசாரணைகளை மேற்கொண்டு, கண்டுபிடித்து, அதனை நிறைவு செய்யும் தறுவாயில் இருக்கின்ற வேளையில், இராணுவ புலனாய்வு பிரிவிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் மரணமடைகின்றார். சிறையிலிருப்பவரை விடுவிக்கவும், கொலையாளி அவரல்ல, நானே கொலையாளி என கடிதம் எழுதியும் இருக்கிறார்.” என பிரதியமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
“இது ஒரு அபூர்வமான கதையாக இருக்கின்றது. சாதாரணமாக மனிதர்கள் தாம் குற்றம் செய்து விட்டு மனச்சாட்சியின் உறுத்தல் காரணமாக மரணமடையலாம். கைது செய்யப்படுவதற்கு முன்னர் மரணிக்கலாம். ஆனால் இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடிதம் ஒன்றையும் எழுதி விட்டு, அவரில்லை நான்தான் என தெரிவித்து மரணித்திருப்பது, யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயமாகும். இதனால் மக்கள் கேட்கின்றனர், உண்மையில் தூக்கிட்டுத்தான் மரணித்தாரா அல்லது கொலை செய்து தூக்கிலிடப்பட்டாரா என”
ஆனால் தற்போது பொலிஸ் விசாரணைகளிலிருந்து, லசந்தவை கொலை செய்த தினத்தில், கொழும்பு மாவட்டத்தின் இரத்மலானையிலேயே அவர் இருந்துள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது வீடு கொழும்பிலிருந்து சுமார் 100 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இது குறித்தான விடயங்களை அவரது தொலைபேசி அழைப்பு விபரங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா சுட்டிக்காட்டினார்.
அன்று கொலை செய்தவர்கள், அதனை மறைக்க, இன்று மற்றுமொரு கொலையைச் செய்திருப்பார்கள் என்பது நியாயமான சந்தேகமாகும். அத்துடன் தற்போது தெளிவாகியுள்ள விடயங்களுக்கு அமைய, அன்று கொலை செய்தவர்கள், இன்று அதிகாரம் இன்றிய நிலையிலும், கொலைக் குற்றத்திலிருந்து தவிர்ந்துகொள்ள,, கொலை தொடர்பான விசாரணைகளை திசைதிருப்புவதற்கும், மக்களை திசைதிருப்புவதற்கும், மேலும் பல கொலைகளை செய்திருப்பார்கள் எனும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பது நியாயமானதாகும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.