எம்.வை.அமீர் -
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியூதீனின், அம்பாறை மாவட்டத்தில் 1500 பேருக்கு தொழில் வழங்கும் திட்டத்தின்கீழ், தோல்பொருள்களைக் கொண்டு பாதுகாப்பு கையுறைகள் தைக்கும் பயிற்சி நிலையம், சாய்ந்தமருதில் 2016-09-16 ஆம் திகதி அங்குராப்பனம் செய்துவைக்கப்பட்டது.
முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக, சாய்ந்தமருது பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், ஏ.ஆர் றிஸ்வானுல் ஜன்னாஹ்வின் வழிநடத்தலின் கீழ், ஆரம்பித்து வைக்கப்பட்ட மேற்படி பயிற்சி நிலையத்தில் முதற்கட்டமாக 100பயிற்சியாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அபியா குறுப் நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ்.அஷ்ரப் தலைமையில் இடம்பெற்ற இவ்அங்குராப்பன நிகழ்வில் கைத்தொழில் அமைச்சின்கீழ் இயங்கும் தோல்பொருள் உற்பத்தி சபையின் முன்னாள் பணிப்பாளரும் தற்போதைய தவிசாளரின் ஆலோசகருமான எல்.பி.எஸ்.கருணதாச கலந்துகொண்டு பயிற்சிகளை ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மதிய குழுவின் முக்கியஸ்தர் எம்.ஐ.ஏ.றஹீம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் தோல்பொருள் உற்பத்தி சபையின் பயிற்சியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
பாதுகாப்பு கையுறைகள் தைப்பதற்கான தோல் சார்ந்த மூலப்பொருட்களை அபியா குறுப் நிறுவனத்தின் ஊடாக வழங்கவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ்.அஷ்ரப் தெரிவித்தார். குறித்த பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பயிலுனர்களுக்கு ஒருமாதகால பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சி முடிவின்போது குறித்த தோல்பொருளைக் கொண்டு பாதுகாப்பு கையுறைகள் தைக்கும் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.