க.கிஷாந்தன்-
வெளிமாவட்ட மாணவர்களை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு அனுமதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நு/பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒன்றியம் மற்றும் பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், பூண்டுலோயா நகரில் 15.09.2016 அன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடந்து முடிந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையில், பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து வெளிமாவட்ட மாணவர்கள் 19 பேர், பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். கிழக்கு மாகாணம், கண்டி, குருநாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களே, இப்பாடசாலையிலிருந்து கணித மற்றும் விஞ்ஞான பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் பழைய மாணவர் ஒன்றியத்தின் தலைவர் பி.ஜெயராமன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 'மேற்படி மாணவர்கள் இப்பாடசாலையிலிருந்து விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களுக்கு தோற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை நாட்களில் கண்டிராத இவர்களை, பரீட்சை நடைபெறும் காலங்களில் மட்டும் காணக்கிடைத்தது.
பாடசாலையில் மலசலக்கூடம் எங்கு இருக்கின்றது என்பது கூட தெரியாத நிலையிலேயே இம்மாணவர்கள் இப்பாடசாலைக்கூட பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், எமது பிரதேச மாணவர்கள் மேலதிக கல்வியைத் தொடர்வதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமற் செய்யப்படுகின்றன. எனவே, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம்” என அவர் கூறினார்.